சுடச்சுட

  
  arunjaitley

  நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் துரிதப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
  ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் அலுவலகத் திறப்பு விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக 45 கோடி யூரோ (சுமார் ரூ.3,120 கோடி) கடனுதவி வழங்குவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி அப்போது உத்தரவாதமளித்தது.
  சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக ரூ.1,400 கோடியை (20 கோடி யூரோ) பாரத ஸ்டேட் வங்கிக்கு கடனாக வழங்குவதாகவும், மீதமுள்ள தொகையை இரண்டாவது தவணையாக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு வழங்கப் போவதாகவும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில், புதிய அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைத்து அருண் ஜேட்லி பேசியதாவது:
  சொந்த நாட்டு மக்களுக்கு மட்டுமே தொழில் மற்றும் பணி வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் கருத்து நிலவுகிறது. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை அத்தகைய நிலை இல்லை. அதன் காரணமாகவே இங்கு நிலவும் பொருளாதார வாய்ப்புகள் அனைவருக்குமானதாக நீடிக்கிறது.
  தற்போதைய சூழலில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் அதைக் கண்கூடாகக் காண முடிகிறது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதை நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கிறேன். நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
  இந்தியாவில் போக்குவரத்து, நீர் மேலாண்மை, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, நெடுஞ்சாலை ஆகிய துறைகளில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் கடனுதவியும் பக்கபலமாக இருக்கும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai