சுடச்சுட

  

  மோடி வருகைக்கு எதிர்ப்பு: குண்டு வைத்து ரயில் நிலையத்தை சூறையாடிய நக்ஸல்கள்

  Published on : 01st April 2017 12:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமர் நரேந்திர மோடி ஒடிஸா மாநிலத்துக்கு வருவதைக் கண்டித்து ராயகடா மாவட்டத்தில் ரயில் நிலையத்தை மாவோயிஸ்டுகள் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடிகுண்டை வெடிக்கச் செய்து சூறையாடினர்.
  புவனேசுவரத்தில் ஏப். 15, 16 ஆகிய தேதிகளில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஒடிஸா வரவிருக்கின்றனர்.
  அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக கிழக்கு கடலோர ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஜே.பி.மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியது:
  ராயகடா மாவட்டத்தில் இருக்கும் டாய்காலு என்கிற ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் 15 முதல் 20 மாவோயிஸ்டுகள் திடீரென ஆயுதங்களுடன் புகுந்தனர்.
  அங்கு பணியில் இருந்த ரயில் நிலைய அதிகாரி எஸ்.கே.பரிடாவை அலுவலகத்தில் இருந்து இழுத்து வந்து அவரது கையில் இருந்த வாக்கி டாக்கி சாதனத்தைப் பறித்துக்கொண்டு வெளியேறுமாறு மிரட்டல் விடுத்தனர். அதன் பிறகு அலுவலகத்தில் இருந்த பொருட்களை சூறையாடி கொளுத்திய மாவோயிஸ்டுகள், வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். பிறகு அங்கிருந்த கூலித் தொழிலாளி ஒருவரையும் பிடித்து வைத்துக்கொண்டனர்.
  அந்த ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் ஊழியர்களை மிரட்டி அதன் இன்ஜினை நிறுத்துமாறு கூறினர்.
  இந்த தாக்குதலில் உள்ளூர் மக்களுக்கோ, ரயில்வே ஊழியர்களுக்கோ பாதிப்பு இல்லை. ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை முழு செயல்பாட்டில் இருக்கிறது. ரயில் நிலைய அதிகாரியிடம் இருந்து வாக்கி டாக்கி சாதனத்தைப் பறித்ததால் ராயகடா-தித்லகர் இடையே டாய்காலு ரயில் நிலையம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவை
  பாதிக்கப்பட்டது. சிக்னல் சரிவர கிடைக்காததால் முனிகுடா ரயில் நிலையத்திலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டன என்று மிஸ்ரா கூறினார்.
  சம்பவம் குறித்து தகவறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.சிவசுப்பிரமணி உடனடியாக ரயில் நிலையத்துக்குச் சென்று பார்வையிட்டார். சரக்கு ரயிலின் இன்ஜினுக்கு மாவோயிஸ்டுகள் சேதம் ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
  மத்தியில் மோடி அரசு மற்றும் மாநிலத்தில் நவீன் பட்நாயக் அரசின் கொள்கைகளைக் கண்டித்து கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை மாவோயிஸ்டுகள் அந்த இடத்தில் விட்டுச் சென்றிருந்தனர். மோடி வருகையைக் கண்டித்தும் சுவரொட்டியில் நக்ஸல்கள் வாசகங்களை எழுதியிருந்தனர்.
  இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் சிஆர்பிஎஃப், சிறப்பு அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்று மாநில டிஜிபி கே.பி.சிங் கூறினார்.
  அந்த ரயில் தடத்தில் பாதுகாப்பு சோதனை நடந்த பிறகு சரக்கு ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai