சுடச்சுட

  

  ரூபாய் நோட்டு விவகாரம்: வெளிநாடு சென்றிருந்த இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் நிறைவு

  By DIN  |   Published on : 01st April 2017 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  oldnotes

  பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்காக, மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியில் வெள்ளிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த வெளிநாடுவாழ் இந்தியர்களும், வெளிநாடு சென்றிருந்த இந்தியர்களும்.

  வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த இந்தியர்கள், பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
  பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றுவது தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், வங்கிகளில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததாலும் பலரும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
  எனினும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், ஜூன் 30-ஆம் தேதி வரை (மேலும் 3 மாதங்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, என்ஆர்ஐ இந்தியர் ஒருவர், ரூ.25,000 வரை மாற்றிக் கொள்ள முடியும்.
  பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு கடைசி நாளான வெள்ளிக்கிழமை, சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா, நாகபுரி ஆகிய நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்காக, வெகுதொலைவில் இருந்து வந்திருந்த மக்கள், நீண்ட நேரம் காத்திருந்தனர். மேலும், சில வங்கிக் கிளைகளில் போதிய அளவில் கவுன்ட்டர்கள் இல்லாததாலும் மக்கள் அவதிப்பட்டனர்.
  முன்னதாக, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி, கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது.
  அதையடுத்து, வெளிநாடு சென்றிருந்த இந்தியர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், 2017-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில், என்ஆர்ஐ இந்தியர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai