சுடச்சுட

  

  லோக்பால் உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது ஏன்? மார்க்சிஸ்ட் எம்.பி. கேள்வி

  By DIN  |   Published on : 01st April 2017 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ""லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை மத்திய அரசு இதுவரை நியமிக்காதது ஏன்?'' என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தபன் குமார் சென் கேள்வியெழுப்பினார்.
  மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் பேசியதாவது:
  அரசுத் துறைகளில் நிலவும் ஊழல்களுக்கு எதிராக நாடு முழுவதும் எழுச்சி ஏற்பட்ட பிறகு, லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கு சட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், அந்த அமைப்புக்கு ஓர் உறுப்பினரைக் கூட மத்திய அரசு இதுவரை நியமிக்கவில்லை.
  லோக்பால் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற வேண்டும். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையில், அவசரச் சட்டம் வாயிலாக முதன்மைச் செயலர் ஒருவரை மத்திய அரசு நியமித்திருந்தால், லோக்பால் நியமனங்களுக்கு ஏதாவது வழிமுறைகள் உருவாகியிருக்கும்.
  லோக்பால் உறுப்பினர்களை நியமிப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டுடன் நடந்து கொள்வது ஏன்? என்று அவர் கேள்வியெழுப்பினார்
  அதற்கு, ""இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது'' என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதிலளித்தார்.
  இதனிடையே, மற்றொரு மார்க்சிஸ்ட் எம்.பி. ரீட்டாவிரதா பானர்ஜி, இடித்துரைப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார்.
  மேலும், ""முக்கிய வழக்கு ஒன்றின் சாட்சியான கேரளத்தைச் சேர்ந்த ஓர் இடித்துரைப்பாளரை மிரட்டி வைப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. அவரும், அவரது குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில் அறிமுகமற்ற நபர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்'' என்றார் பானர்ஜி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai