சுடச்சுட

    

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஹிமாசல முதல்வர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

    By DIN  |   Published on : 01st April 2017 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    virbhadra

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங் உள்ளிட்ட 9 பேர் மீது தில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    முன்னதாக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமக்கும், தமது மனைவிக்கும் எதிராக சிபிஐ தொடுத்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி வீரபத்ர சிங் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது.
    இதுதொடர்பாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் வீரபத்ர சிங் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
    கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி எனக்கும், எனது மனைவிக்கும் எதிராக சிபிஐ, தில்லியில் தொடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
    ஹிமாசலப் பிரதேச முதல்வராக நான் இருந்து வரும் நிலையில், எனக்கு சம்பந்தமில்லாத தில்லியில் வழக்கு தொடர்ந்ததன் மூலம் சிபிஐ தனது சட்ட வரம்பை மீறியுள்ளது.
    பதவியிலுள்ள முதல்வரின் இல்லத்தில் சோதனை நடத்துவதற்கு முன், மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்திடமிருந்து உரிய அனுமதி பெறப்படவில்லை.
    மேலும், அரசியல் உள்நோக்கம் காரணமாகவே எனது இல்லத்திலும், பிற இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
    இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் சிபிஐ தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டதாவது:
    மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் வீரபத்ர சிங் தில்லியில் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தான் வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்துகளை சேர்த்தார். எனவே தான் இந்த வழக்கு தில்லியில் தொடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தது.
    முன்னதாக, ஹிமாசலப் பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தனது அனுமதியில்லாமல் வீரபத்ர சிங்கை கைது செய்வதோ, விசாரிப்பதோ, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதோ கூடாது என்று தெரிவித்திருந்தது.
    பின்னர், கடந்த ஆண்டு (2016), ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி இந்த வழக்கை ஹிமாசலப் பிரதேச உயர் நீதிமன்றத்திலிருந்து தில்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
    இந்நிலையில், சிபிஐ தொடுத்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி வீரபத்ர சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கி வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
    வீரபத்ர சிங் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன். மேலும், தனது அனுமதியில்லாமல் வீரபத்ர சிங்கை கைது செய்வதோ, விசாரிப்பதோ, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதோ கூடாது என்று ஹிமாசலப் பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்கிறேன்.
    மேலும், அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காகவே தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று விபின் சாங்கி தெரிவித்தார்.
    குற்றப்பத்திரிகை தாக்கல்: இதைத் தொடர்ந்து வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங், எல்ஐசி முகவர் ஆனந்த் சௌஹான் உள்ளிட்ட 9 பேர் மீது தில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வீரேந்தர் குமார் கோயல் முன், சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai