சுடச்சுட

  

  வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்ட ஆணைய பரிந்துரைகளைத் திரும்ப பெற வேண்டும்

  By DIN  |   Published on : 01st April 2017 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வழக்குரைஞர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரான இந்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) வலியுறுத்தியுள்ளது.
  இந்திய சட்ட ஆணையத்தால் முன்மொழியப்பட்டுள்ள வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த மசோதா -2017-இல் வழக்குரைஞர்களின் நலன்களைப் பாதிக்கும் அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்புக்கு வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தது.
  நீதிமன்றப் புறக்கணிப்பு: இதையடுத்து, தில்லியில் உச்ச நீதிமன்றம் தவிர பிற நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை பணிகளைப் புறக்கணித்தனர். தில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ், தீஸ் ஹசாரி, ரோஹிணி, கர்கர்டூமா, சாகேத், துவாரகா உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் பணிகளைப் புறக்கணித்தனர் என்று புது தில்லி வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் சந்தோஷ் மிஸ்ரா தெரிவித்தார். இதேபோல் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்தனர்.
  இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, இணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  இந்திய சட்ட ஆணையம் முன்மொழிந்துள்ள வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த பரிந்துரைகள் வழக்குரைஞர் தொழிலை நசுக்கும் வகையில் உள்ளது. "ஒழுங்கு நடவடிக்கைக் குழு'வில் சட்டத் தொழிலுக்கு தொடர்பில்லாத பிற துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவதற்கு சட்ட ஆணையம் பரிந்துரைத்திருப்பதும் ஏற்புடையதல்ல.
  வழக்குரைஞர்கள் தொடர்புடைய "தவறான நடத்தை' எனும் பிரிவில் வரும் சில அம்சங்களும் வழக்குரைஞர் தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மனுதாரர் சார்பில் வாதிடப்படும் வழக்கு தோல்வியுறும் போது வழக்குரைஞரிடமிருந்து இழப்பீடு பெறச் செய்யும் பரிந்துரையும் முரண்பாடாக உள்ளது.
  எந்தவிதக் காரணமும் இல்லாமல் போராட்டம் நடத்தும் வழக்குரைஞர்கள், சங்கங்கள் மீது பார் கவுன்சில் மூலம் அமைக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தற்போது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் வழக்குரைஞர்கள் மீது "ஒழுங்கு நடவடிக்கை' எடுக்கலாம் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
  இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். எங்கள் கோரிக்கைகளை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இது தொடர்பாக வழக்குரைஞர்களுடன் உரிய வகையில் ஆலோசிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
  வழக்குரைஞர்கள் தொழிலைப் பாதிக்கும் வகையிலான பரிந்துரைகளை சட்ட ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக இந்திய பார் கவுன்சில் கூட்டம் நடத்தி விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்
  கையை மேற்கொள்ளும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai