சுடச்சுட

  

  விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காதவர் பிரதமர் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 01st April 2017 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farmers

  தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை வெள்ளிக்கிழமை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி. உடன் அக்கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக

  தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளின் குறைகளைக் கேட்காமலும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
  விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தென்னக நதிகள் இணைப்புகள் விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் மார்ச் 14-ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வடமாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்கங்கள், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டவற்றின் தலைவர்கள் ஜந்தர் மந்தருக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அவர்களது வேண்டுகோளுக்கு விவசாயிகள் செவிசாய்க்கவில்லை.
  ராகுல் காந்தி சந்திப்பு: இந்நிலையில், போராட்டக் குழுவினரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்தார். அக்கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மணிசங்கர் அய்யர், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர். ராகுல் காந்தியிடம் தங்கள் போராட்டத்தின் நோக்கம், அதன் மீதான மத்திய அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து விவசாயிகள் விளக்கினர்.
  மோடி அரசு மீது புகார்: பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் எதிரானதாக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு உள்ளது.
  நீண்ட நாள்களாக விவசாயிகள் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்திய போதிலும் அவர்களை அழைத்துப் பேசவோ, அவர்களது குறைகளைத் தீர்க்கவோ மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 தொழிலதிபர்களின் ரூ.1.4 லட்சம் கோடி கடன்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், அதே அணுகுமுறையை விவசாயிகளின் விஷயத்தில் காட்ட மத்திய அரசு மறுக்கிறது. விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க தமிழகத்திலும் நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார் ராகுல் காந்தி.
  கனிமொழி உறுதி: முன்னதாக, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தில்லிக்கு சனிக்கிழமை வருவார் என்று கனிமொழி தெரிவித்தார்.
  இதேபோல, தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் விவசாயிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai