சுடச்சுட

  

  அகிலேஷ் என்னை அவமானப்படுத்தியதால் தேர்தலில் சமாஜவாதி தோல்வியைத் தழுவியது: முலாயம் சிங் யாதவ்

  By DIN  |   Published on : 02nd April 2017 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mulayam

  "எனது மகனும், சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவருமான அகிலேஷ் யாதவ் என்னை அவமானப்படுத்திய காரணத்தால் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி தோல்வியை சந்தித்தது' என்று முலாயம் சிங் யாதவ் வருத்தம் தெரிவித்தார்.
  தேர்தலில் சமாஜவாதி தோல்வி அடைந்த பிறகு அவர் தனது வருத்தத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்துவது இதுவே முதன்முறையாகும். உத்தரப் பிரதேச மாநிலம், மைன்புரி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றை முலாயம் சிங் யாதவ் சனிக்கிழமை திறந்து
  வைத்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த சமாஜவாதி கட்சியினர் முன்பு அவர் பேசியதாவது:
  நான் மிகவும் மோசமாக அவமானப்படுத்தப்பட்டேன். எனது வாழ்க்கையில் அதுபோன்று எப்போதும் அவமானப்பட்டதில்லை.
  இருப்பினும், நான் அதை சகித்துக் கொண்டேன். எந்தவொரு மாநில அரசியல் தலைவரும் தனது மகனை மாநில முதல்வராக்கியதில்லை. ஆனால், எனது மகன் அகிலேஷை நான் முதல்வராக்கினேன்.
  ஆனால், எனக்கு அவர் விசுவாசமாக இல்லை. எனக்கு விசுவாசமாக இல்லாதவர், மக்களுக்கும் இருக்க மாட்டார் என்று வாக்காளர்கள் சிந்தித்து முடிவெடுத்து விட்டனர். இதே காரணத்தை பிரதமர் நரேந்திர மோடியும் தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்டார். மக்களும் அதை புரிந்துகொண்டு தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினர்.
  அதன்காரணமாகவே சமாஜவாதி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. பாஜக வெற்றி வாகை சூடியது.
  என்னை மட்டுமல்ல அவரது சித்தப்பாவும், அமைச்சராக மிகக் கடினமாக உழைத்துக் கொண்டிருந்த சிவபால் யாதவையும் அகிலேஷ் கட்சியிலிருந்து நீக்கி அவமானப்படுத்தி விட்டார்.
  புதிய கட்சியை தொடங்குவது குறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. உங்கள் (கட்சியினர்) கருத்துகளை கேட்டறிந்த பிறகே புதிய கட்சியை தொடங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, அயோத்தியில் ராமர் கோயில் அல்லது மசூதி கட்டுவதற்கு முதல் கல்லை நான் நாட்டுவேன் என்றார் முலாயம் சிங் யாதவ்.
  பாஜக விமர்சனம்: இதனிடையே, முலாயம் சிங் யாதவின் கருத்தை பாஜக விமர்சித்துள்ளது.
  இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் மணீஷ் சுக்லா கூறுகையில், "இத்தகைய கருத்தை முலாயம் சிங் யாதவ் முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். மிகவும் காலதாமதமாக அவர் இதை தெரிவித்துள்ளார். அகிலேஷ் ஆட்சி நடைபெற்ற காலத்திலும் அவர் அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai