சுடச்சுட

  
  nara-lokesh

  விஜயவாடா: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் (34)அமைச்சராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். நாரா லோகேஷுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

  ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வாரிசு, அரசியல் நடக்கிறது. தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மகன் கே. சாரதா ராமராவ் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் அமைச்சரவையில் இடம் பெற்று அமைச்சராக இருந்து வருகிறார்.

  அவரைப்போல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தனது மகன் லோகேஷை அரசியலுக்கு கொண்டு வந்தார். கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு ஆலோசனைகள் கூறி வந்தார். தொடர்ந்து மகனை அமைச்சராக நியமிக்கவும் திட்டமிட்டார்.

  இதற்காக ஆந்திர அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடு மாற்றம் செய்துள்ளார். தனக்கு நெருக்கமானவராக இருக்கும் போஜ்ஜாலா கோபால கிருஷ்ணரெட்டி, பல்லேரகுநாதரெட்டி, ரவேலா கிஷோர் பாபு, பீதாலா சுஜாதா, கிமிடி மிர்னாலினி ஆகிய 5 பேரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

  அவர்களுக்குப்பதில் தனது மகன் லோகேஷ் உள்பட 11 பேரை புதிய அமைச்சர்களாக நியமித்தார். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா விஜயவாடாவில் இன்று காலை நடந்தது. அவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் ஆந்திர அமைச்சரவையின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. ஓய்எஸ்ஆர் காங்கிரசிலிருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவிய 21 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  சந்திரபாபு நாயுடு மகன் பேரவை உறுப்பினராக இல்லை என்பதால் ஆந்திர சட்டப்பேரவையின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் (TDP)  சார்பில் மேல் சபைக்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  தற்போது அமைச்சராக பதவி ஏற்றுள்ள லோகேஷூக்கு தகவல் தொழில் நுட்பம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை பொறுப்புக்கள் கொடுக்கப்படுகிறது.

  கடந்த 2014-இல் முதல்வராக பதவியேற்ற பின்னர் சந்திரபாபு நாயுடு செய்யும் முதல் அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

  அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு 2019-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் ஊக்கமளிக்கும் வகையில் பொறுப்புகள் ஏதாவது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போஜ்ஜாலா கோபால கிருஷ்ணரெட்டி உடல் நலத்தை காரணம் காட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

  சில வருடங்களுக்கு முன்பு திருப்பதி அலிபிரியில் சந்திரபாபு நாயுடு கார் மீது நக்சலைட்டுகள் கண்ணி வெடி தாக்குதல் நடத்திய போது கோபாலகிருஷ்ண ரெட்டியும் சந்திரபாபு நாயுடுவுடன் இருந்தார். அப்போது கோபால கிருஷ்ண ரெட்டி உடலில் பாய்ந்த வெடிகுண்டு துகளை அகற்ற முடியாததால் அப்படியே உடலில் உள்ளது.

  இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார். சாதாரண தொண்டனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai