சுடச்சுட

  

  ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: அதிகாரிகள் கூண்டோடு பணியிடமாற்றம்

  By DIN  |   Published on : 02nd April 2017 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rknagarbielection

  சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி வருவாய், காவல் துறை, மாநகராட்சி ஆகியவற்றில் பணியாற்றி வரும் அதிகாரிகளைக் கூண்டோடு இடமாற்றம் செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
  இது தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு மத்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு சென்னைக்குச் சென்று இடைத் தேர்தல் பணிகளை ஆய்வு செய்தது.
  அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
  ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வருவாய்த் துறையின் கீழ் பணியாற்றி வரும் உதவித் தேர்தல் அலுவலர் மற்றும் அப்பதவிக்கு கீழ் உள்ள அதிகாரிகள்; ஆர்.கே.நகரை தங்களின் காவல் வரம்புக்குள் கொண்டுள்ள ஆய்வாளர் முதல் கூடுதல் ஆணையர் வரையிலான பணியில் உள்ள அதிகாரிகள்; மாநகராட்சியில் உதவிப் பொறியாளர் முதல் செயல் பொறியாளர் வரை பணியில் உள்ள அதிகாரிகள் இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
  5 புதிய பார்வையாளர்கள்: ஆர்.கே. நகரில் கூடுதலாக ஐந்து நுண்ணிய தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இவர்கள் மோட்டார்சைக்கிள்கள் மூலம் குறுகலான சந்துகளில் உள்ள இடங்களுக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு தேர்தல் ஆணையப் பார்வையாளர்களுக்கு உதவியாக இருப்பர். மேலும், ஆர்.கே. நகர் தொகுதியில் அனைத்து தெருக்கள், சந்துகள், சாலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. 10 பறக்கும் படையினர் கண்காணிப்பை மேற்கொள்வர். இந்தக் குழுவினரின் நடமாட்டம் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும்.
  வாகனக் கட்டுப்பாடு: ஆர்.கே.நகர் தொகுதிக்குள் எந்தவித அரசுத் துறைக்குச் சொந்தமான வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. அதுமட்டுமின்றி அரசியல் தலைவர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் ஆகியோரின் வாகனங்களும் தொகுதிக்குள் செல்லக் கூடாது. அவ்வாறு சென்றால் அவற்றை எந்தவிதத் தயக்கமுமின்றி சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  800 பேர் அடங்கிய மொத்தம் 10 கம்பெனிகளைச் சேர்ந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என மத்திய உள்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai