சுடச்சுட

  

  கருப்புப் பண ஒழிப்பு: 500 போலி நிறுவனங்களில் அதிரடி சோதனை

  By DIN  |   Published on : 02nd April 2017 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  blackmoney

  நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பல்வேறு போலி நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் சனிக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தினர். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  மும்பை, கொல்கத்தா உள்பட 110 இடங்களில் செயல்பட்டு வந்த 500-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களில் இந்த திடீர் சோதனையை மேற்கொள்ளப்பட்டது கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணத்தை மாற்ற பல்வேறு நூதன வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. போலியாக நிறுவனங்கள் தொடங்கி, அதன் வாயிலாக பதுக்கல் பணத்தை மாற்றும் நடவடிக்கைகள் அவற்றில் முக்கியமான ஒன்று.
  இதுதொடர்பாக அண்மையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு விளக்கத்தை அளித்தது. சுமார் 1,155 போலி நிறுவனங்கள் செயல்பட்டு வந்ததை வருமான வரித் துறையினர் கண்டறிந்துள்ளதாகவும், அவற்றின் வாயிலாக ரூ. 13,330 கோடி கருப்புப் பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
  இத்தகைய முறைகேடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பிரத்யேகமாக சிறப்புக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் அமலாக்கத் துறையும் ஓர் உறுப்பு அமைப்பாக உள்ளது. இந்நிலையில், 17 மாநிலங்களில் செயல்பட்டு வந்த போலி நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர். குறிப்பாக, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, லக்னெள, ஜெய்ப்பூர், பாட்னா, ஸ்ரீநகர், கொச்சி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் காலை முதல் இரவு வரை சோதனை நீடித்தது. மொத்தம் 110 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  இதுமட்டுமன்றி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்குச் சொந்தமான சில நிறுவனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு, ஏற்கெனவே நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
  கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத் துறை இயக்குநர் கர்னல் சிங் தெரிவித்துள்ளார்.
  இந்த நடவடிக்கையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 800 பேர் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


  சென்னையில் 8 இடங்களில் சோதனை

  கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கியில் சென்னையில் அமலாக்கத் துறையினர் 8 இடங்களில் சோதனை நடத்தினர்.
  மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நிறுவனம், பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் 8 குழுக்களாக இந்த சோதனையை நடத்தினர். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்வதற்கு, இந்த நிறுவனங்கள் போலியாக செயல்பட்டு வந்தது சோதனையில் தெரியவந்திருப்பதாக அமலாக்கத்துறையினர் அப்போது தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai