சுடச்சுட

  

  குடிநீருக்காக 3 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க வேண்டும்: தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை நிராகரித்தது கர்நாடக அரசு

  By DIN  |   Published on : 02nd April 2017 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cauvery

  குடிநீருக்காக 3 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை கர்நாடக அரசு நிராகரித்தது.
  தமிழக முதல்வரின் முதன்மைச் செயலர் சிவதாஸ் மீனா தலைமையில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் கே.பணீந்திர ரெட்டி, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய தமிழக அரசு அதிகாரிகள் குழுவினர் பெங்களூரு, விதானசெளதாவில் சனிக்கிழமை கர்நாடக அரசு தலைமைச் செயலர் சுபாஷ் சந்திர குன்ட்டியாவைச் சந்தித்தனர். அவர்களிடம், காவிரி நதியில் இருந்து தமிழகத்தின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற 3 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
  இதைத் தொடர்ந்து, கர்நாடக-தமிழக அரசு அதிகாரிகளிடையே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சி, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கர்நாடக அரசு அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறிய தமிழக அரசு அதிகாரிகள், கோடை காலத்தில் குடிநீருக்காகத் தேவைப்படும் 3 டிஎம்சி தண்ணீரை மனிதநேய அடிப்படையில் திறந்துவிடும்படி கேட்டுக்கொண்டனர்.
  கர்நாடக அரசு தலைமைச் செயலர் சுபாஷ்சந்திர குன்ட்டியா, கர்நாடகத்தின் வறட்சி நிலை மற்றும் கோடை காலத்தில் குடிநீருக்கே பிரச்னை ஏற்படும்படியான அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை எடுத்துக் கூறி, தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்றார். இதனால் தமிழக அரசு அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.
  இதுகுறித்து கர்நாடக அரசு தலைமைச் செயலர் சுபாஷ்சந்திர குன்ட்டியா செய்தியாளர்களிடம் கூறியது: குடிநீருக்காக 3 டிஎம்சி தண்ணீரை வழங்குமாறு தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
  காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி தண்ணீர் திறந்துவிடும்படி அவர்கள் கேட்கவில்லை. தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மனிதநேயத்தின் அடிப்படையில் தண்ணீர் கேட்டனர். கர்நாடகத்தில் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள 4 அணைகளில் மொத்தம் 8.8 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. காவிரி நதிப்படுகை பகுதிகளில் குடிநீர் வழங்க மாதத்துக்கு 3 டிஎம்சி தண்ணீர் வேண்டியிருக்கிறது. கர்நாடகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், கோடை காலத்தில் இங்கும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என்பதை தமிழக அரசு அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளோம். மேலும், தமிழகத்துக்கு காவிரி நீர் தர இயலாது என்பதை தெளிவுபடத் தெரிவித்திருக்கிறோம்.
  கர்நாடகத்தைப் போலவே தமிழகத்திலும் வறட்சி, குடிநீர்ப் பற்றாக்குறை இருப்பதை உணர்கிறோம். ஆனாலும், தமிழகத்துக்கு உதவும் நிலையில் கர்நாடகம் இல்லை. ஒருவேளை மழை பெய்தால், சூழ்நிலையைப் பொருத்து தமிழகத்துக்கு உதவும் வாய்ப்பை ஆராய்வோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai