சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர் பதவிக்கு மோகன் பாகவத்தை நிறுத்தலாம்

  By DIN  |   Published on : 02nd April 2017 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை நிறுத்தலாம்' என்று சிவசேனை கட்சியைத் தொடர்ந்து, கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.கே.ஜாஃபர் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. அப்பதவிக்கு நடைபெற உள்ள தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  இதற்கு, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் பெயர்கள் தில்லி அரசியல் வட்டாரங்களில் அடிபடுகின்றன.
  இதனிடையே, குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை நிறுத்தலாம் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை அண்மையில் தெரிவித்திருந்தது. எனினும், அப்பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்று பாகவத் கூறிவிட்டார்.
  இந்நிலையில், சிவசேனையின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.கே.ஜாஃபர் ஷெரீஃப் கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
  நாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கு மோகன் பாகவத்தின் பெயர் பரிசீலிக்கப்படுவதில் யாரும் தவறுகாணக் கூடாது. அவர் ஒரு தேசபக்தர். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர். மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டு வருபவர். எனவே அவரை இப்பதவிக்குப் பரிசீலிப்பதை எதிர்ப்பதன் மூலம் இதை யாரும் ஒரு பிரச்னையாக்கக் கூடாது என்று அக்கடிதத்தில் ஜாஃபர் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார்.
  தொலைபேசி மூலம் பேட்டி: இந்தச் சூழ்நிலையில், அவரது இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து முரண்படக் கூடியதாக இருப்பது குறித்து பிடிஐ செய்தியாளர் தொலைபேசி மூலம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜாஃபர் ஷெரீஃப் அளித்த பதில் வருமாறு:
  மோகன் பாகவத்துக்கு எனது ஆதரவு என்பது கொள்கை சார்ந்த விஷயமாகும். குடியரசுத் தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் அவர்கள் அரசியல்சாசனப்படியே செயல்பட்டாக வேண்டும். எனவே, மோகன் பாகவத் குடியரசுத் தலைவராகி, அரசியல்சாசனப்படி பணியாற்றுவதில் என்ன தவறு?
  வங்கதேச விடுதலைப் போரின்போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது. அதேபோல், அரசியல் கட்சிகள் பரந்த மனப்பான்மை கொண்டவையாக இருக்க வேண்டும்.
  குடியரசுத் தலைவர் பதவிக்கு மோகன் பாகவத்தின் பெயர் பரிசீலிக்கப்படுவதில் சிறுபான்மையினர் யாரும் அச்சமோ, அவநம்பிக்கையோ கொள்ளத் தேவையில்லை என்று முஸ்லிம் என்ற முறையிலும், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த நபர் என்ற முறையிலும் நான் கருதுகிறேன் என்று ஜாஃபர் ஷெரீஃப் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai