சுடச்சுட

  

  தலாய் லாமாவின் அருணாசல் பயணம்: சீன ஆட்சேபத்தை நிராகரித்தார் ரிஜிஜு

  By DIN  |   Published on : 02nd April 2017 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dalalia

  அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டிக்கு சனிக்கிழமை வந்த தலாய் லாமாவை வரவேற்கும் அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு (இடது).

  திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் செல்வதற்கு சீனா தெரிவித்த ஆட்சேபத்தை வெளியுறவுத் துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு நிராகரித்துள்ளார்.
  தலாய் லாமா வரும் 4-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அருணாசலப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார். எனினும், அருணாசலப் பிரதேசத்தை திபெத்தின் ஒரு பகுதி என்று கூறி உரிமை கோரி வரும் சீனா, அந்தப் பகுதிக்கு தலாய் லாமா செல்லக் கூடாது என்று தெரிவித்து வருகிறது. மேலும், அவர் அருணாசலப் பிரதேசம் செல்ல அனுமதிப்பது இருதரப்பு உறவுகளை கடுமையாக பாதித்து விடும் என்று சீனா எச்சரித்துள்ளது.
  இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான வெளியுறவுத் துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, இடாநகரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  சீனாவின் உள்விவகாரங்களில் நாம் (இந்தியா) தலையிடுவதில்லை. அதேபோல் நமது உள்விவகாரங்களில் அந்த நாடு தலையிடக் கூடாது. தலாய் லாமாவின் பயணம் என்பது (அருணாசலப் பிரதேச) மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்றார் ரிஜிஜு.
  "இந்தியாவில் சுதந்திரத்தை உணர்ந்தேன்': இதனிடையே, அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற "தி அஸ்ஸாம் டிரிப்யூன்' பத்திரிகையின் பவழ விழாக் கொண்டாட்டத்தில் தலாய் லாமா கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
  சீனாவின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து எனது குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் கடந்த 1959-இல் திபெத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்குள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோம். அப்போது எடுக்கப்பட்ட எனது தாயார் மற்றும் சகோதரி இடம்பெற்றுள்ள படம் உள்ளிட்ட புகைப்படங்கள் இந்த விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை எனக்கு அந்த நாட்களை நினைவுபடுத்துகின்றன.
  அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, எங்களை விருந்தினர்களைப் போல் வரவேற்றார். இந்தியாவில் நீண்ட காலமாகத் தங்கியிருக்கும் அரசு விருந்தினர் நான்.
  திபெத்தில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்கு முந்தைய தினங்கள் பதற்றம் மிகுந்திருந்தன. இந்தியாவில் மக்களாலும் அதிகாரிகளாலும் இதயபூர்வமாக நான் வரவேற்கப்பட்டேன். அப்போதுதான் சுதந்திரத்தை உணர்ந்தேன். எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியது என்றார் தலாய் லாமா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai