சுடச்சுட

  

  தில்லியில் தமிழக விவசாயிகளுக்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு!

  By DIN  |   Published on : 02nd April 2017 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  delhi

  தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகளை சனிக்கிழமை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.

  தில்லியில் 19-ஆவது நாளாக சனிக்கிழமை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் ஆதரவு தெரிவித்தார்.

  திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தில்லிக்கு ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஜந்தர் மந்தர் சாலையில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இருந்த பகுதிக்குச் சென்றார். அங்கு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குழுவினரிடம் அவர் சுமார் 30 நிமிடங்கள் பேசினார். அப்போது மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: 19 நாள்களாக விவசாயிகள் தில்லியில் போராடி வருகின்றனர். தமிழக முதல்வர் நேரடியாக தில்லிக்கு வருகை தந்து விவசாயிகளுக்காக மத்திய அரசிடம் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தருவதில்தான் மாநில முதல்வருக்கு அதிக அக்கறை உள்ளது. அதேசமயம், தில்லிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், வேறு அரசு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தருவதாகக் கூறி விட்டுச் சென்றுள்ளார்.
  அதிமுக ஆட்சியில்தான் விவசாயப் பெருங்குடி மக்கள் இதுவரையில் தமிழக வரலாற்றில் இல்லாத வகையில், 250 பேருக்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
  அவர்களின் குடும்பத்துக்கு உதவித் தொகையை வழங்க முடியாத நிலையில் மாநில அரசு உள்ளது.
  "எதிர்க்கட்சித் தலைவர்' என்ற முறையில் "தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்னையை விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்; மத்திய அரசை வலியுறுத்தி சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்; அனைத்துக் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து முறையிடுங்கள்' என மாநில அரசிடம் வலியுறுத்தி வருகிறேன்.
  ஆனால், ஆளும் அதிமுக அரசு, அதை ஏற்காமல் தமிழகம் வந்த மத்திய ஆய்வுக் குழுவிடம் மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்லியது. அதுமட்டுமின்றி தமிழகத்துக்குத் தேவைப்படும் வறட்சி நிதியைக் கூட முழுமையாக பெற முடியாமல் உள்ளது.
  அண்மையில் நடத்து முடிந்த உத்தர பிரதேச தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களிலும், "பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டது.
  எனவே, பிரதமர் உடனடியாக நேரம் அளித்து, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமுக முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த நிலை தொடரும் என்றால், தமிழகத்தில் விரைவில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.
  டி.ராஜா கருத்து: இதற்கிடையே, ஸ்டாலின் வந்த போது விவசாயிகள் மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜாவும் இருந்தார். இதையடுத்து, ஸ்டாலினும், டி. ராஜாவும் அருகருகே அமர்ந்தபடி விவசாயிகளிடம் பேசினர். அப்போது டி.ராஜா, "விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்கிறது' என்றார். இதேபோல, மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலரும் நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரியும் தில்லிக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.


  தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகளை சனிக்கிழமை சந்தித்த  திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். உடன் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, டிகேஎஸ். இளங்கோவன்,  மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai