சுடச்சுட

  

  தில்லியில் தமிழக விவசாயிகள் மொட்டையடித்துப் போராட்டம்

  By DIN  |   Published on : 02nd April 2017 05:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  agri

  புதுதில்லி: தில்லி ஜந்தர் மந்தரில் 20-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு போராடினர்.

  தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம், வங்கிகடன் ரத்து உட்படப் பல்வேறு கோரிக்கைகளுடன் தென்னிந்திய நதிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு முன்னிலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

  இதில், தமிழகத்தின் மற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் மாணவர்கள் உட்படப் பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டு ஆதரவளித்து வருகின்றனர்.

  தமிழகம் மற்றும் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் ஜந்தர் மந்தர் வந்திருந்து நேரில் ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.

  இந்தப் போராட்டம் இன்று 20-வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று விவசாயிகள் பலரும் மொட்டையடித்துக் கொண்டு மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

  விவசாயிகள் சிலர் பாதி மொட்டை அடித்துக் கொண்டு "மத்திய அரசே! மத்திய அரசே! விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே!" என கோஷமிட்டனர்.

  மாலை 5 மணிக்கு தில்லியின் ராஜீவ் சோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஜந்தர் மந்தர் வரை கண்டன ஊர்வலம் நடத்த உள்ளனர். இதில், தில்லிவாழ் தமிழர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும்படி அய்யாகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.

  இந்நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் துணைத்தலைவர் தங்க சண்முகசுந்தரம் தனது குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்தார்.

  பிரதமர் நரேந்தர மோடியிடம் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை ஏற்று முதல்வர் பழனிசாமியும் தம் கட்சி எம்பிக்கள் மற்றும் மாநிலங்களவை துணை சபாநாயகரான எம்.தம்பிதுரையை மீண்டும் ஜந்தர் மந்தர் அனுப்பி விவசாயிகளுக்கு உதவ உறுதியளித்திருப்பதாக சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

  தில்லியில் 19-ஆவது நாளாக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai