Enable Javscript for better performance
நாட்டின் கலாசாரத்தை அழிக்க முயலும் இடதுசாரிகள்: எஸ்.குருமூர்த்தி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

  

  நாட்டின் கலாசாரத்தை அழிக்க முயலும் இடதுசாரிகள்: எஸ்.குருமூர்த்தி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 02nd April 2017 01:23 AM  |   அ+அ அ-   |    |  

  gurumurthy

  இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் அழித்தொழிக்கும் முயற்சியில் இடதுசாரிகள் ஈடுபட்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
  நமது பண்பாட்டோடு இரண்டறக் கலந்துள்ள குடும்பக் கட்டமைப்பும், சமூக நல்லிணக்கமுமே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  ஹிந்துத்துவ சிந்தனையாளரும், பாரதிய விசார கேந்திரத்தின் இயக்குநருமான பி.பரமேஸ்வரனின் 90-ஆவது பிறந்தநாள் விழா கேரள மாநிலம், கொச்சியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் விஜய் பட்கர், பாரதிய விசார கேந்திரத்தின் பொதுச் செயலாளர் மோகன்தாஸ், இணை இயக்குநர் ஆர்.சஞ்சயன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் எஸ்.குருமூர்த்தி பேசியதாவது:
  சமூக மேம்பாட்டுக்காக பரமேஸ்வரன் ஆற்றிய சேவைகளை எவராலும் மறுதலிக்கவோ, புறந்தள்ளவோ முடியாது. அவரைப் போன்ற ஹிந்துத்துவ மறுமலர்ச்சிக் கொள்கை கொண்டோர் காட்டிய வழியில் தேசம் தற்போது பயணித்து வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
  இந்திய தேசம் பன்முகத் தன்மையையும், கலாசாரப் பாரம்பரியத்தையும் தன்னகத்தே கொண்ட தனித்துவமிக்க நாடு. உலகின் எந்த நாட்டிலும் காண முடியாத மேன்மையான பண்பாடும், குடும்பக் கட்டமைப்பும் இங்கு உண்டு. குடும்ப உறவுகளைத் தாண்டி, சமூகத்திலும் பரஸ்பரம் பந்தங்களை வரையறுத்துக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம்.
  உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தபிறகு, நாட்டில் கடும் பணத் தட்டுப்பாடு நிலவியது. அப்போது நம் மக்கள் ஒருவருக்கொருவர் பிரதிபலன் பாராமல் பரஸ்பரம் உதவி செய்து கொண்டனர்.
  இதனால், அந்தத் திட்டம் அளப்பரிய வெற்றியை அடைந்தது. மத்திய அரசின் சீர்திருத்தக் கொள்கைகள் ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் நமது சமூக உறவுமுறைக் கலாசாரமும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது.
  மத்திய கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கையானது வரும்காலங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் என்பதில் ஐயமில்லை,
  மேலை நாடுகளைப் பொருத்தவரை, அங்கு செயல்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன. தேசத்தின் வரலாற்றை அழிக்கும் வகையிலான கொள்கைகளே பெரும்பாலும் அந்த நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. இடதுசாரிக் கட்சிகள் அந்தக் கருத்தையே வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவின் கலாசார அடையாளங்களையும், தொன்மங்களையும் அழித்தால்தான் இங்கு பொருளாதாரப் புரட்சியை உருவாக்க முடியும் என்று கார்ல் மார்க்ஸ் கூட கருதினார்.
  ஆனால், அந்தக் கொள்கைகள் எல்லாம் ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகின. வலிமையான உறவுக் கட்டமைப்பும், கலாசாரப் பாரம்பரியமும் கொண்ட இந்தியாவில் அவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
  தற்போது மீண்டும் அத்தகைய கொள்கைகளைப் புகுத்த இடதுசாரிகள் முயன்று வருகின்றனர் என்றார் எஸ்.குருமூர்த்தி.

  kattana sevai