சுடச்சுட

  

  பசுக்களை கொல்வோரை தூக்கிலிடுவோம்: சத்தீஸ்கர் முதல்வர்

  By DIN  |   Published on : 02nd April 2017 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramansingh

  "பசுக்களை கொல்வோரை தூக்கிலிடுவோம்' என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் தெரிவித்துள்ளார்.
  பாஜக ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு, காளை, எருமை மற்றும் கன்றுக் குட்டிகளை இறைச்சிக்காக கொல்வது, அந்த இறைச்சியை வைத்திருப்பது, இதர மாநிலங்களுக்கு கொண்டு செல்வது ஆகியவற்றுக்கு தடை உள்ளது. அதனைமீறி, பசு வதையில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது.
  இந்தச் சூழலில், குஜராத்தில் பசு வதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. உத்தரப் பிரதேசத்திலும் பசுவதையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  இந்நிலையில், சத்தீஸ்கரில் பசு வதையில் ஈடுபடுவோருக்கு எதிராக மேலும் கடுமையான நிலைப்பாட்டை அரசு எடுக்குமா? என்று முதல்வர் ரமண் சிங்கிடம் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேள்வியெழுப்பினர்.
  அதற்கு பதிலளித்த அவர், "சத்தீஸ்கரில் கடந்த 15 ஆண்டு கால பாஜக ஆட்சியில் அதுபோன்ற (பசுவதை) சம்பவங்கள் ஏதும் நடைபெற்றதா? இல்லையென்றே கருதுகிறேன். அதுபோன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்களை தூக்கிலிடுவோம்' என்றார்.
  ஒவைஸி எதிர்ப்பு: இதனிடையே, மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் பாஜக கபட நாடகமாடுவதாக மஜ்லிஸ் கட்சி எம்.பி. அஸாத்துதீன் ஒவைஸி விமர்சித்துள்ளார்.
  அவர் கூறியதாவது: பாஜகவை பொருத்தவரை, உ.பி.யில் பசு "தாய்' போன்றது. ஆனால், வடகிழக்கு மாநிலங்களிலோ "ருசி'யானது. அரசியல் ஆதாயத்துக்காக, வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சியை தடை செய்வது குறித்து பாஜக வாய் திறப்பதில்லை. பாஜக ஆளும் கோவாவில் மாட்டிறைச்சி எளிதாக கிடைக்கிறது என்றார் ஒவைஸி. அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, "அரசியல் சந்தர்ப்பவாதத்துக்காக கபட நாடகமாடுவது பாஜகவின் வழக்கம்' என்றார்.
  சுப்பிரமணிய சுவாமி சாடல்: மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜகவை விமர்சித்துள்ள ஒவைஸியை, அக்கட்சி எம்.பி. சுப்பிரமணிய சுவாமி சாடியுள்ளார். அவர் கூறுகையில், "இந்திய அரசமைப்பு சட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக ஒவைஸி கூறுகிறார். அரசமைப்புச் சட்டத்தின் 48-ஆவது பிரிவு, பசு வதையை தடை செய்கிறது என்பதை அவர் அறியவில்லையா?' என்றார்.
  இதேபோல, மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங் கூறுகையில், "வடகிழக்கு மாநில மக்கள் குறித்து ஒட்டுமொத்தமாக ஒவைஸி கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. மணிப்பூர் மக்கள் பசுவை வழிபடவும், பாதுகாக்கவும் செய்கின்றனர்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai