Enable Javscript for better performance
பயங்கரவாதத்தை முறியடிக்க ஒத்துழைப்பு: இந்தியா-மலேசியா உறுதி- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதத்தை முறியடிக்க ஒத்துழைப்பு: இந்தியா-மலேசியா உறுதி

    By DIN  |   Published on : 02nd April 2017 12:42 AM  |   அ+அ அ-   |    |  

    pm

    தில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக்கை சனிக்கிழமை சந்தித்த பிரதமர் மோடி.

    பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை முறியடிப்பதற்கு இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்று இந்தியாவும் மலேசியாவும் உறுதிபூண்டுள்ளன.
    மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக், 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் அவரும், பிரதமர் நரேந்திர மோடியும் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
    பயங்கரவாத செயல்களுக்கு எந்த வகையிலும் நியாயம் கற்பிக்கக் கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது பயங்கரவாதிகளையும், பயங்கரவாத இயக்கங்களையும் அழிப்பது மட்டுமல்ல. பயங்கரவாதத்தை ஆதரிப்பது மட்டுமன்றி, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகளை அடையாளம் கண்டு, அந்த நாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளை தியாகிகளாக கொண்டாடுவதை தடுக்க வேண்டும் என்று அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியை, தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியிருந்த நிலையில், அந்த நாட்டை மறைமுகமாக சாடும் வகையிலான கருத்துக்கள் கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
    இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், மலேசிய பிரதமர் நஜீப்பும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, மோடி கூறியதாவது: இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு சவால்களையும், பிரச்னைகளையும் திறம்பட எதிர்கொள்வதற்காக, இரு தரப்பு ஒத்துழைப்பையும், வர்த்தக தொடர்புகளையும் மேலும் வலுப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார வளமை, நிலைத்தன்மை ஆகியவற்றை பராமரிப்பதில் இரு நாடுகளுக்கும் பெரும் பங்கு உள்ளது என்றார் மோடி.
    நஜீப் ரஸாக் கூறுகையில், "பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்' என்றார்.
    7 ஒப்பந்தங்கள் கையெழுத்து: இச்சந்திப்பின்போது, இந்திய ஒத்துழைப்புடன் மலேசியாவில் யூரியா, அம்மோனியா உற்பத்தி செய்யும் ஆலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் உள்பட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள், கல்வி, விமானச் சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகள் தொடர்புடையவையாகும்.

    kattana sevai