சுடச்சுட

    

    ம.பி. இடைத் தேர்தல் ஒத்திகை: ஒப்புகைச் சீட்டில் பாஜக சின்னம்? அறிக்கை கோரியது தேர்தல் ஆணையம்

    By DIN  |   Published on : 02nd April 2017 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Election

    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள உதவும் கருவியில் ஒத்திகையின்போது யாருக்கு வாக்களித்தாலும் பாஜக சின்னம் வருவதாக புகார் எழுந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட மத்தியப் பிரதேச மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.
    எனினும், இத்தகைய குற்றச்சாட்டை அந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சலீனா சிங் திட்டவட்டமாக மறுத்தார்.
    பிந்த் மாவட்டத்தில் உள்ள அடேர் சட்டப் பேரவைத் தொகுதிக்கும், உமாரியா மாவட்டம், பந்தவ்கர் சட்டப் பேரவைத் தொகுதிக்கும் வரும் 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
    இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்வதற்கான கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
    இந்த வகை கருவிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். கண்ணாடி பெட்டியில் வாக்களித்ததற்கான ஒப்புகைச் சீட்டு கட்சிச் சின்னத்துடன் 7 வினாடிகளுக்கு வாக்காளர்களுக்குத் தெரியும். பின்னர், அந்தச் சீட்டு உள்சென்று விழுந்துவிடும். வாக்காளர்கள் அந்தச் சீட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
    பிந்த் மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள அந்த வகை கருவிகள் சரியாக இயங்குகிறதா? என்று பிந்த் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
    அப்போது, எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தாலும் பாஜக சின்னத்துடன் கூடிய ஒப்புகைச் சீட்டு அந்தக் கருவியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
    இதுதொடர்பாக அந்த மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது.
    இதை தெரிந்துகொண்ட சில செய்தியாளர்களிடம் இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவரக் கூடாது என்று சலீனா சிங் எச்சரித்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
    சலீனா சிங் மறுப்பு: இதற்கிடையே, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்வதற்கான கருவியில் ஒத்திகை நடைபெற்ற போது முதலில் பாஜக சின்னமும், பின்னர் காங்கிரஸ் சின்னத்துடன் கூடிய ஒப்புகைச் சீட்டும் வந்ததாக சலீனா சிங் தெரிவித்துள்ளார்.
    தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸூக்கும் உரிய பதிலளித்துவிட்டதாக அவர் கூறினார். செய்தியாளர்களை எச்சரித்ததாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai