சுடச்சுட

  

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல்களில் பயன்படுத்த வேண்டாம்

  By DIN  |   Published on : 02nd April 2017 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைக்குக் கொண்டுவருமாறும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, மோகன் பிரகாஷ், கே.சி.மிட்டல், விவேக் தன்கா ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியையும், மற்ற இரு தேர்தல் ஆணையர்களையும் தில்லியில் சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது, மத்தியப் பிரதேசத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள உதவும் கருவியில் ஒத்திகையின்போது யாருக்கு வாக்களித்தாலும் பாஜக சின்னம் வந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை அவர்கள் சுட்டிக் காட்டினர். தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனு ஒன்றையும் அளித்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறக் கூடிய முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இந்த ஒட்டுமொத்த நடைமுறையையும் விரிவான முறையில் மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பாக அவற்றைப் பராமரிப்பது, இயக்குவது, தகவல் பதிவிடுவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளையும், நபர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதா? அல்லது வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தும் பழைய நடைமுறைக்குத் திரும்புவதா? என்ற விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையையும் பெற்றுச் செயல்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  "ஜனநாயகத்துக்கு பாதிப்பு': தேர்தல் ஆணையர்களைச் சந்தித்த பின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோகன் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  ஜனநாயகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து மீண்டும் மீண்டும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனவே, தேர்தல்களை மீண்டும் வாக்குச்சீட்டு அடிப்படையில் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். பதிவு செய்யப்படும் வாக்குகள் மீது சந்தேகங்கள் எழுந்தால் அது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து விடும் என்றார் அவர்.
  "கட்டாயம் என்ன?': காங்கிரஸின் மற்றொரு பொதுச் செயலாளரான திக்விஜய் சிங் கூறியதாவது:
  குஜராத்திலோ, மற்ற எந்த இடத்திலோ, எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களும் வாக்குச்சீட்டுகளைக் கொண்டே நடத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும். அந்த இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் சில்லுகள் (சிப்) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், அவற்றைப் பயன்படுத்தியே தீர வேண்டிய கட்டாயம் என்ன ஏற்பட்டது?
  வங்கதேசத்தில் பேங்க் ஆஃப் பங்களாதேஷின் கணக்கில் மர்ம நபர்கள் ஊடுருவி 8 கோடி டாலர்களைத் திருடியுள்ளனர். ரஷிய வங்கியில் இருந்து 3 கோடி டாலர்கள் திருடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சாத்தியம் என்றபோது வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏன் முறைகேடு செய்ய முடியாது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai