சுடச்சுட

  

  மேகாலய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை

  By DIN  |   Published on : 02nd April 2017 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேகாலய மாநிலத்தில் சுகாதார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று முதல்வர் முகுல் சங்மா தலைமையிலான அரசை சாடியுள்ள தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி), அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
  இதுதொடர்பாக, அந்த மாநில சட்டப் பேரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  மேகாலயத்தில் சுகாதாரத் துறைக்கு, மாநில அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. சுகாதாரக் கொள்கை மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமல்படுத்தப்படும் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் உள்ளிட்டவை குறித்து மீளாய்வு செய்வதற்காக, மாநில சுகாதாரத் திட்ட கூட்டத்தை கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து ஒருமுறைகூட முதல்வர் முகுல் சங்மா நடத்தவில்லை.
  கிராங்களைப் பொருத்தவரை, சுமார் 300 சுகாதார மையங்கள் பற்றாக்குறையாக உள்ளன. இதேபோல மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களுக்கு 56 சதவீதமும், செவிலியர்களுக்கு சுமார் 20 சதவீதமும் பற்றாக்குறை நிலவுகிறது. துணை மருத்துவப் பணியாளர்களும் போதிய அளவில் இல்லை. இது, மிகவும் தீவிரமான பிரச்னையாகும்.
  மாநிலத்தில் துணை சுகாதார மையங்களும் 40 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறையாக உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளை ஏற்படுத்துவதில், மாநில அரசு தோல்வியடைந்துவிட்டது.
  எனவே, புதிதாக சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள் அமைப்பதுடன், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களையும் போதிய அளவில் நியமிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai