சுடச்சுட

  

  ரூ.2 லட்சத்துக்கு மேலான ரொக்கப் பரிவர்த்தனைக்கு இனி 100 சதவீத அபராதம்: நிதி மசோதாவுக்கு பிரணாப் ஒப்புதல்

  By DIN  |   Published on : 02nd April 2017 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranabmukherjee

  நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2017-ஆம் ஆண்டைய நிதி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஒப்புதலை அளித்தார். இதையடுத்து அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக ரொக்க பரிவர்த்தனை மேற்கொள்ளும் நபருக்கு 100 சதவீத அபராதம் விதிப்பது உள்ளிட்ட முக்கிய ஷரத்துகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
  மத்திய பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் வரையிலும் ரொக்க பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரொக்கப் பரிவர்த்தனையை ரூ.2 லட்சமாக குறைத்தும், அதற்கு அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்தால், அதே அளவு தொகை (100 சதவீதம்) அபராதமாக விதிக்கும் வகையிலும் நிதி மசோதாவில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதேபோல், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் தங்களது ஆதார் எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும், நிரந்தரக் கணக்கு எண் (பான் அட்டை) வைத்திருப்போர், அதனுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நிறுவனங்கள், காசோலை, வரைவோலைமூலமே அதை அளிக்கும் வகையில், 2013-ஆம் ஆண்டைய நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்தல், 7 மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன.
  இந்தத் திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக நிதி மசோதாவை மத்திய அரசு அனுப்பி வைத்தது.
  அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஒப்புதலை வெள்ளிக்கிழமை அளித்தார். இதுகுறித்து தில்லியில் மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
  அஸ்ஸாம் மாநிலத்துக்கு சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நிதி மசோதாவுக்கு தனது ஒப்புதலை அளித்தார். இதையடுத்து நிதி மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வரிவிதிப்புகளும், பிற அறிவிப்புகளும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான அறிவிக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என்றார்.
  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து, நிதி மசோதாவில் இடம்பெற்றுள்ள பல்வேறு ஷரத்துகளும் சனிக்கிழமை முதல் (ஏப்.1) உடனடியாக அமலுக்கு வந்தன.
  நிதியாண்டின் முதல் தேதியில் இருந்து பட்ஜெட் அறிவிப்புகளும், நிதி மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வரிவிதிப்புகள், திட்டங்கள் ஆகியவையும் அமலுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும்.
  ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கடைசியில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் காலனியாதிக்க நடைமுறையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. இதேபோல், மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்தது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாத முதல் தேதியிலேயே மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒருங்கிணைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட் அறிவிப்புகள், நிதி மசோதா ஷரத்துகள் உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் மார்ச் 30-ஆம் தேதிக்குள் முடிவடைந்தன. அதற்கடுத்த நாள், அதாவது மார்ச் 31-ஆம் தேதி தனது ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்துள்ளார். இதனால், அரசுத் திட்டங்களை செயல்படுத்தவும், வரித் திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய அரசுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்கும்.
  இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்பட்டாலும், அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைய மே மாதம் 15-ஆம் தேதி வரை காலம் பிடிக்கும். இதையடுத்து மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் பணி ஆகஸ்ட் மாதம் இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai