சுடச்சுட

  

  வறட்சி, புயல் நிவாரணம்: தமிழகத்துக்கு ரூ.1,712 கோடி விடுவிப்பு

  By DIN  |   Published on : 02nd April 2017 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  waterscacity

  தமிழக வறட்சி, புயல் நிவாரணம் ஆகியவற்றுக்காக மத்திய உயர்நிலைக் குழு பரிந்துரைத்த ரூ.1,712.10 கோடி நிதியை மாநில அரசுக்கு விடுவித்துள்ளதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  தமிழகத்தில் கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வறட்சி நிலவியது. வரலாற்றில் இல்லாத வகையில் புயல் சீற்றம் ஏற்பட்டு கடலோர மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்தது. இதனால், விரக்தியிலும் வாங்கிய கடனைச் செலுத்த முடியாத நிலையிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் புயல் சீற்றம், வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுக்கள் சந்தித்து ஆய்வு நடத்தின. அக்குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு மார்ச் 23-ஆம் தேதி தில்லியில் கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான தமிழகம், கர்நாடகம் ஆகியவற்றுக்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பாக இறுதி செய்யப்பட்டது.
  இந்நிலையில், இரு மாநிலங்களுக்கும் தீர்மானிக்கப்பட்ட நிதியை மத்திய அரசு விடுவித்தது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
  மத்திய உயர்நிலைக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்துக்கு ரூ.1,793.63 கோடி வழங்கவும் கர்நாடகத்துக்கு ரூ.1,782.44 கோடி வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.
  வறட்சி நிவாரணம்: இதில் தமிழகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிதியில் ஏற்கெனவே தமிழக பேரிடர் நிவாரண நிதியத்தின் வசம் மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.345.64 கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளது.
  அந்த நிதியை மத்திய நிதியுதவியாக கணக்கிட்டு, தமிழகத்துக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ள வறட்சி நிதியில் கழித்து மீதமுள்ள ரூ. 1,447.99 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  இதேபோல, கர்நாடகத்துக்கு ஏற்கெனவே நிவாரண நிதியாக ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.96.92 கோடியை மத்திய நிதியுதவியாகக் கணக்கிட்டு, தற்போது அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள வறட்சி நிதியை கழித்து மீதமுள்ள ரூ.1,235.52 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  இந்த நிவாரண நிதியை சம்பந்தப்பட்ட புயல், வெள்ள பாதிப்பு மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் நேரடியாகப் பெறுவதை உறுதிப்படுத்த அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று உயர்நிலைக் குழு அறிவுறுத்தியுள்ளது.
  புயல் நிவாரணம்: "வர்தா' புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.264.11 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 14-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த நிதி மத்திய அரசுக்கு மாநிலங்களில் இருந்து வரும் 42 சதவீத வரிகளில் இருந்து வழங்கப்படுகிறது.
  அந்த வகையில் 2016-17 நிதியாண்டில் வந்த மத்திய வரிகள் மூலம் கிடைத்த தொகையில் ரூ.6.08 லட்சம் கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பகிர்ந்து வழங்கியுள்ளது. இதில் தமிழக அரசு ரூ.24,538 கோடியும் கர்நாடகம் ரூ.28,750 கோடியும் 2016-17 நிதியாண்டில் பெற்றுள்ளன.
  இதேபோல, 2016-17 நிதியாண்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மொத்தம் ரூ.48,869 கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அளித்துள்ளது. விவசாயிகள் பயன் பெறுவதற்காக, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13,340 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  கேட்டது எவ்வளவு?: தமிழகத்தில் நிலவிய கடும் வறட்சி, புயல் பாதிப்புகளுக்காக மத்திய அரசிடம் ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என மாநில அரசு கோரியது.
  ஆனால், ஏற்கெனவே வேறு திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியுடன் தமிழகம் கோரிய தொகையை கணக்கிட்டு மீதமுள்ள தொகை ரூ.1,712 கோடிதான் என்பது போல மத்திய அரசு ஒரு கணக்கைப் போட்டு ரூ.1,447.99 கோடியை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai