சுடச்சுட

  

  அகிலேஷ் அரசு மீதான ஊழல் புகார் பாரபட்சமின்றி விசாரிக்கப்படும்: உ.பி. அமைச்சர் அறிவிப்பு

  By DIN  |   Published on : 03rd April 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ""உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய அரசின் மீதான ஊழல் புகார் எவ்வித பாரபட்சமுமின்றி விசாரிக்கப்படும்'' என்று மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
  அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய அரசில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான புகார்கள் ஏதும் வந்தால் அதுகுறித்து பாரபட்சமாகவோ அல்லது அரசியல் ரீதியிலான பழிவாங்கலோ இன்றி விசாரணை நடத்துவதற்காக தனியாக குழு அமைக்கப்படும்.
  லக்னௌவில் அகிலேஷ் அரசு செயல்படுத்திய கோமதி நதி நீர் திட்டத்தின் பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், திட்டத்துக்கான மதிப்பீடு ரூ. 1,500 கோடி என்பதும், மொத்த தொகையும் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு விட்டதும் தெரியவந்தது.
  இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ. 1,437 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டம் இன்னமும் முழுமை பெறவில்லை. எனவே, இதில் முறைகேடுகள் நடந்துள்ளது ஊர்ஜிதமாகிறது. இதுகுறித்து விசாரிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தனி குழுவை அமைத்துள்ளார்.
  அகிலேஷ் யாதவ் குறித்து அவருடைய தந்தையும், சமாஜவாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளவை குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அது தந்தைக்கும், மகனுக்கும் இடையே நிலவும் சொந்த பிரச்னையாகும்.
  உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இதுதொடர்பாக, விரைவில் கூடவுள்ள மாநில அமைச்சரவையின் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என்றார் சுரேஷ் குமார் கன்னா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai