சுடச்சுட

  
  NaraLokesh

  ஆந்திர அமைச்சரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷ் ஞாயிற்றுக்கிழமை சேர்க்கப்பட்டார். இதேபோல், மேலும் 10 எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
  தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அமைச்சரவை கடந்த 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8-ஆம் தேதி பதவியேற்றது. அதன்பிறகு முதல்முறையாக சந்திரபாபு நாயுடு தனது அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைத்தார்.
  அமைச்சர்கள் பல்லே ரகுநவாத ரெட்டி, பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி, கிமிடி மிருணாளினி, பெத்தல சுஜாதா, ரவேலா கிஷோர் பாபு ஆகிய 5 பேரை நீக்கினார். அதற்குப் பதிலாக, தனது மகன் நரா லோகேஷ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த சுஜய் கிருஷ்ணா ராவ், பூமா அகில பிரியா, ஆதிநாராயண ரெட்டி, அமர்நாத ரெட்டி ஆகிய 4 எம்எல்ஏக்கள், தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் 6 பேர் ஆகிய 11 பேரை அமைச்சரவையில் சேர்த்து கொண்டார். வெலகபுடியில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் செய்து வைத்தார்.
  எம்எல்ஏ ராஜிநாமா: அமைச்சரவையில் நீக்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த எம்எல்ஏ பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் எம்எல்ஏ பதவியை உடனடியாக ராஜிநாமா செய்தார். சட்டப் பேரவைத் தலைவர் கோடேல சிவபிரசாத ராவுக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்தார். அதன் நகலை முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அனுப்பி வைத்தார்.
  அமைச்சரவை மாற்றத்தின்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் பி.நாராயணா மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை.
  அமைச்சரவையில் புதிதாக 11 பேர் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்களின் எண்ணிக்கை 26-ஆக தற்போது அதிகரித்துள்ளது.
  சந்திரபாபு நாயுடுவின் மகன் எம்எல்ஏக்களுக்கு இருக்கும் வாக்குகள் அடிப்படையில் சட்டமேலவைக்கு கடந்த மாதம் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அன்று முதல் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அவர் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai