சுடச்சுட

  

  உயர்மதிப்பு நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் 3 - 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம்?

  Published on : 03rd April 2017 11:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rupee

  கள்ள ரூபாய் நோட்டுகளைத் தடுக்கும் நோக்கில், உயர்மதிப்பிலான 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை ஒவ்வொரு 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் (1000 மற்றும் 500) வாபஸ் பெறப்பட்ட நடவடிக்கைக்குப் பின் கடந்த நான்கு மாதங்களில் பெருமளவிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசு இவ்வாறு உத்தேசித்துள்ளது.
  மத்திய நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உள்துறை செயலாளர் ராஜீவ் மஹரிஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  அப்போது, உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு கரன்சிகளின் பாதுகாப்பு அம்சங்களை ஒவ்வொரு 3-4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுவதாகவும், அதை இந்தியாவும் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தனர்.
  இந்தியாவில் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்ய வேண்டியது பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை வரை, 1000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட 2000-ஆம் ஆண்டில் இருந்து அதில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
  அதேபோல், கடந்த 1987-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்புதான்
  மாற்றங்கள் செய்யப்பட்டன.
  தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லை என்றும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் இருந்த பாதுகாப்பு அம்சங்களே இவற்றிலும் இடம்பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாகப் பரிசோதித்தனர். அப்போது 2000 ரூபாய் நோட்டில் உள்ள 17 பாதுகாப்பு அம்சங்களில் 11 அம்சங்கள் அந்தக் கள்ள நோட்டுகளில் காணப்பட்டதை அவர்கள் கண்டறிந்தனர். நீர் எழுத்துக்கள், அசோகர் தூண் சின்னம், ரூபாய் நோட்டில் இடதுபுறம் காணப்படும் "ரூ.2000' என்ற எழுத்துக்கள் ஆகியவை அந்த அம்சங்களில் அடங்கும்.
  மேலும், மங்கள்யான் விண்கலத்தின் படம், தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தின் இலச்சினை ஆகியவையும் கள்ள ரூபாய் நோட்டுகளின் மறுபுறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளன. கள்ள ரூபாய் நோட்டுகளின் அச்சடிப்பு மற்றும் காகிதம் ஆகியவை தரம் குறைந்ததாக இருந்தபோதிலும் அவை பார்ப்பதற்கு பெரும்பாலும் அசல் நோட்டுகள் போலவே தெரிவது குறிப்பிடத்தக்கது.
  இந்தச் சூழ்நிலையில், உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை 3-4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுவதன் மூலம் கள்ள நோட்டுகளைப் பெருமளவில் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai