சுடச்சுட

  

  ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய படை பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

  Published on : 03rd April 2017 11:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

  இதையடுத்து, வரும் வாரம் முதல் அவருக்கு 24 மணி நேரமும் மூன்று ஷிஃப்டு பணி முறையில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த தானியங்கி துப்பாக்கி ஏந்திய நான்கு வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர். ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் பயணம் செய்யும் போது, அவரது வாகனத்துக்கு முன்புறமும், பின்புறமும் மத்திய படையினர் இரண்டு வாகனங்களில் செல்வர். இதில் "பைலட்' வாகனம் வழிகாட்டுதலின்படி அதைப் பின்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பயணம் செய்ய வேண்டும். இதையொட்டி, சென்னையில் உள்ள சிஆர்பிஎஃப் படை முகாமில் இருந்து வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்படுவர் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம் சென்னையில் இருந்து தேனிக்கு காரில் சென்ற போது, ஓ.பன்னீர்செல்வத்தை நோக்கி சில மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்த முயன்றனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் டாக்டர் வா.மைத்ரேயன் தலைமையில் சென்று மனு அளித்தனர். இதைப் பரிசீலித்த உள்துறை அமைச்சகம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு "ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.
  இது குறித்து மத்திய உள்துறை உயரதிகாரி கூறியதாவது: தமிழக முன்னாள் முதல்வர் என்ற முறையிலும், மாநிலத்தில் நிலவும் அசாதாரணமான அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு "ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இது தொடர்பாக சென்னை மற்றும் தேனியில் உள்ள அவரது இல்லங்கள், அலுவலகம் ஆகியவற்றில் மத்திய உளவுத் துறையின் பாதுகாப்புப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவருக்கு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலும் இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பயணம் செய்யும் போது மட்டும் அவருக்கு மத்தியப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றார் அந்த அதிகாரி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai