சுடச்சுட

  

  தமிழக அரசு அதிகாரிகளுடன் இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை

  By DIN  |   Published on : 03rd April 2017 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rknagarbielection

  சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலாளர், மாநில உள்துறைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோருடன் தில்லியில் உள்ள தேர்தல் ஆணையர்கள் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை (ஏப்ரல் 3) ஆலோசனை நடத்தவுள்ளனர்.
  இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலாய் மல்லிக் சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
  ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
  இதன்படி, தேர்தல் பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மாநில உள்துறைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர், வருமான வரித் துறை தலைமை இயக்குநர் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தக் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
  ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
  அதிமுகவின் சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன், முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களத்தில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
  இந்நிலையில், இடைத் தேர்தலின் போது வாக்காளர்களைக் கவர பெருமளவில் பணப்பட்டுவாடா போன்ற தேர்தல் விதிமீறல் நடைபெறுவதாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பரஸ்பரம் தேர்தல் ஆணையத்தில் புகார்களை அளித்துள்ளனர். மேலும், ஆளும் கட்சிக்கு சாதகமாகச் செயல்படும் வருவாய், காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
  இந்தச் சூழலில் இடைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளது. இத்தேர்தலுக்கான கண்காணிப்பு, பறக்கும் படை, செலவின விவகாரங்கள் போன்றவற்றை மேற்பார்வையிடும் பணிக்காக இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மத்திய வருவாய் துறை தலைமை இயக்குநரும் திங்கள்கிழமை நடைபெறும் காணொலி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai