சுடச்சுட

  

  நீதித்துறையின் சுதந்திரத்தை முழுமையாக பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது: ரவிசங்கர் பிரசாத்

  By DIN  |   Published on : 03rd April 2017 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ravisankar

  நீதித்துறையின் சுதந்திரத்தை முழுமையாகப் பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
  உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டுக் கொண்டாட்ட நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:
  நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அது முழுமையானதாக இருக்கும். அதேபோல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்கவும் அரசு தீர்மானமாக உள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக உதவி மையங்களை நாம் அமைக்க உள்ளோம். சுமார் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்கும் பொறுப்பு இந்த மையங்களிடம் ஒப்படைக்கப்படும். சட்ட உதவிக்கான முன்னோடித் திட்டம் ஒன்று, உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தொடங்கப்பட்டுள்ளது.
  நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பது என்ற இலக்கை மத்திய அரசு எட்டச் செய்வதில் வழக்குரைஞர்கள் உதவ வேண்டும். ஏழைகளுக்கு நீதி கிடைக்கச் செய்ய அவர்கள் தன்னார்வத்துடன் பணியாற்றுவது அவசியம். கட்டணம் வர வாய்ப்பில்லாத வழக்குகளில் கூட தங்கள் நேரத்தையும், ஆற்றலையும் செலுத்த வழக்குரைஞர்கள் முன்வர வேண்டும்.
  அரசாங்கமே பதிவு செய்யக்கூடிய வழக்குகளை கூடுமானவரை குறைக்குமாறு எனது அமைச்சரவை சசாக்களுக்கும், மாநில அரசுகளுக்கும், பிரதமரின் உத்தரவுப்படி நான் கடிதம் எழுதியுள்ளேன். காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று நீண்ட காலமாக கோரப்பட்டு வருகிறது. அந்த விஷயத்திலும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
  நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் சுமார் 5,000 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த நீதிமன்றங்களில் 2.7 கோடி வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 38.7 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai