சுடச்சுட

  

  நீதித்துறையின் சுமையை குறைப்பதற்கு மத்திய அரசு உதவும்: பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 03rd April 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  up-bookrelease

  உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆம் ஆண்டு கொண்டாட்ட விழாவில் நினைவு மலரை வெளியிடும் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்

  நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நீதித்துறைக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
  உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு 150 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையிலான கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
  நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் பேசியபோது, அவரது வார்த்தையில் வேதனை வெளிப்பட்டதை உணர்ந்தேன். நீதித்துறையின் சுமையை குறைப்பதற்கும், தேக்கமடைந்துள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும்.
  சட்டம் தொடர்பான பிரம்மையை போக்கும் வகையில், 1200 பழைய சட்டங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதுபோல், நீதித்துறையை நவீனப்படுத்தி, நீதித்துறைக்கு மத்திய அரசு உதவி செய்துள்ளது. நீதித்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கான பணியில் மக்கள் ஈடுபட வேண்டும்.
  நீதிமன்றங்களின் பணிகளை எளிமைப்படுத்தும் வகையில், அங்கு தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், அதன் தரத்தை மாற்றவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் மேற்கொண்ட பணிகள் பாராட்டக்கூடியவை ஆகும்.
  நீதிமன்றங்களில் விசாரணை கைதிகள், சாட்சிகள், அதிகாரிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு வழக்கமான முறையை பின்பற்றினால் காலவிரயமே ஏற்படும். இதற்குப் பதிலாக விடியோ கான்பரன்சிங் முறை பின்பற்றப்பட்டால், காலவிரயத்தையும், பண விரயத்தையும் தடுக்க முடியும்.
  வரும் 2022-ஆம் ஆண்டோடு, நமது நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகப் போகின்றன. இந்த ஆண்டை நமது நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கான ஆண்டாக நிர்ணயித்து நீதித்துறையும், அரசும், பொது மக்களும் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வருத்தம்: முன்னதாக, விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் பேசியபோது, நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் தேங்கி கிடப்பதை சுட்டிக்காட்டி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
  உச்ச நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்து கிடக்கின்றன. நீதித்துறையின் இந்த சுமையை குறைப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
  விடுமுறை காலத்தில் நீதிபதிகள் 5 நாள்கள் பணிபுரிந்து, நாளொன்றுக்கு 10 வழக்குகளுக்கு தீர்வு கண்டு, தேக்கமடைந்துள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இந்த வழிமுறையின் மூலம், திருமணத் தகராறு தொடர்பான வழக்குகள், மத்தியஸ்தம் தொடர்பான வழக்குகள் என்று ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
  மலேசியாவில் இதுபோன்ற நடைமுறையைக் கையாண்டதால், தேக்கமடைந்திருந்த வழக்குகளின் எண்ணிக்கை 5-இல் ஒரு பகுதியாக குறைந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு, 3 அரசமைப்பு அமர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளேன்.
  உச்ச நீதிமன்றத்தில் நீதித்துறை தொடர்பான நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வகையில், அனைத்து நடைமுறைகளிலும் தாளின் பயன்பாட்டை ஒரு மாதத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரவும் நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் என்று கேஹர் கூறினார்.
  விழாவில் உத்தரப் பிரதேச ஆளுநர் ராம்நாயக், மேற்கு வங்க ஆளுநர் கே.என். திரிபாதி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திலிப் பி. போஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai