சுடச்சுட

  
  draja

  எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்கு, தேசிய அளவில் மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகள் புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யோசனை தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் செல்வாக்குடைய கட்சியாக திகழ்கிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையை தீவிரமாக எடுத்துக் கொண்டு, பாஜகவை எதிர்கொள்வதற்கு பிற ஒத்த கருத்துகளுடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து அக்கட்சி சிந்திக்க வேண்டும்.
  தற்போதைய சூழ்நிலையில், வலதுசாரி பிற்போக்குவாதம், பாசிச சக்திகளுக்கு எதிர்ப்பு அணியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கெனவே ஆலோசனை நடத்திவிட்டன. பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாருடன் 3 நாள்களுக்கு முன்பு நான் இதுகுறித்து ஆலோசனை நடத்தினேன். அப்போது, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நிதீஷ் குமார் ஆதரவு தெரிவித்தார்.
  ஆர்எஸ்எஸ் நிர்பந்தத்தின்பேரில், நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நினைக்கிறது. ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணிக்கு மாற்றாக, நாட்டு மக்களுக்கு சக்திவாய்ந்த மாற்றுச்சக்தியை நாம் அளிக்க வேண்டும். இதற்கு நாம் (எதிர்க்கட்சிகள்) அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். மாநில கட்சிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறினார்.
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "தேசிய அளவில் புதிய கூட்டணியை அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினோம். அதில் சில தலைவர்கள் சாதகமான பதிலை அளித்தனர்' என்றன.
  உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்தது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அதேநேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட எந்த இடதுசாரி கட்சிகளுக்கும் பெரிய அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai