சுடச்சுட

  

  பெற்றோரின் பராமரிப்புக்கு பிள்ளைகள் அளிக்கும் தொகை மீதான உச்ச வரம்பை நீக்க முடிவு

  By DIN  |   Published on : 03rd April 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வயதான பெற்றோரை பராமரிக்க மாதந்தோறும் அவர்களது பிள்ளைகளிடம் இருந்து பெறப்படும் தொகை மீதான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  இதுதொடர்பாக சட்டத் திருத்தங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
  இதுகுறித்து மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  வயதான பெற்றோர் அல்லது மூத்த குடிமக்களுக்கு பராமரிப்பு செலவுக்காக அவர்களது பிள்ளைகள் கட்டாயம் குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல மற்றும் பராமரிப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வயதான பெற்றோருக்கு அவர்களது பிள்ளைகள் மாதத்துக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
  இந்நிலையில், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்துக்கு பல்வேறு மூத்த குடிமக்கள் கூட்டமைப்புகளிடம் இருந்தும் புகார்கள் வந்தன. அந்தப் புகார்களில், பெற்றோர்களின் பராமரிப்புக்காக பிள்ளைகளால் அளிக்கப்படும் தொகை போதாது, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல், அந்த தொகை குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
  இதுகுறித்து மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சக செயலர், மூத்த குடிமக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்கள், தேசிய சட்ட ஆணையத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல மற்றும் பராமரிப்புச் சட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
  அப்போது, வயதான பெற்றோரை பராமரிக்க மாதந்தோறும் அவர்களது பிள்ளைகளிடம் இருந்து பெறப்படும் தொகை மீதான உச்சவரம்பை நீக்குவது என்றும், பெற்றோர் தங்கியிருக்கும் விடுதிகளில் அளிக்கப்படும் சேவைகளுக்கு பெறப்படும் தொகையை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகள் அளிக்க வேண்டிய பணம் குறித்து முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல மற்றும் பராமரிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai