சுடச்சுட

  
  gas cylinder

  மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.5.57 உயர்த்தப்பட்டுள்ளது.
  அதேநேரத்தில் மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது.
  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை, அன்னிய செலவாணி விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாத்திலும் 1-ஆம் தேதியன்று விமான எரிபொருள் விலை, சமையல் எரிவாயு உருளையின் விலையை இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
  அதன்படி, ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் மேற்கண்டவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன.
  இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.5.57 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அந்த சமையல் எரிவாயு விலை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரூ.440.50-க்கு விற்கப்படுகிறது.
  மானியமில்லா சமையல் எரிவாயுவின் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் விலை ரூ.737.50-லிருந்து ரூ.723-ஆக குறைந்துள்ளது.
  விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, கிலோ லிட்டருக்கு ரூ.2,811.38 குறைக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  மானியவிலை சமையல் எரிவாயு உருளையின் விலையில் கடந்த பிப்ரவரி மாதம், மார்ச் மாதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த காலகட்டத்தில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றதால், எண்ணெய் நிறுவனங்கள் விலை தொடர்பாக முடிவு செய்யவில்லை. இந்நிலையில், தற்போது அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை பிப்ரவரி 1-ஆம் தேதியன்று ரூ.66.50-ம், மார்ச் 1-ஆம் தேதியன்று ரூ.86-ம் அதிகரிக்கப்பட்டது. அதையடுத்து தற்போது அதன்விலை குறைக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai