சுடச்சுட

  

  முறைகேடு செய்தால் தானாக நின்றுவிடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

  By DIN  |   Published on : 03rd April 2017 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  electronic voting

  முறைகேடுகள் செய்ய யாராவது முயற்சி மேற்கொண்டால், தானாகவே நின்று விடக் கூடிய அடுத்த தலைமுறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் கொள்முதல் செய்ய உள்ளது.
  உத்தரப் பிரதேசம் உள்பட அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
  தேர்தல் ஆணையம் தன்னிடம் உள்ள, கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்ட 9 லட்சத்து 30 ஆயிரத்து 430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இவற்றுக்குப் பதிலாக இதே எண்ணிக்கையில் புதிய இயந்திரங்களை வாங்க உத்தேசித்துள்ளது. அதன்படி, வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பழைய இயந்திரங்களுக்குப் பதிலாக எம்-3 வகையைச் சேர்ந்த புதிய இயந்திரங்களை வாங்குவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.1,089 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
  அதற்கு முன்பு, 14 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களை ரூ.9,200 கோடி மதிப்பில் வாங்குவது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தேசத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஜூலை 20-இல் ஒப்புதல் அளித்திருந்தது.
  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்காக மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் சில தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தது. அப்போது, புதிய இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.1,940 கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது. இந்த இயந்திரங்கள் அடுத்த ஆண்டுக்குள் (2018) அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
  இந்நிலையில், மேற்கண்ட புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாத வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அந்த இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய யாராவது முயற்சி மேற்கொள்ளும்போது அவை தானாகவே செயல்படுவதை நிறுத்தி விடும். மேலும், அப்படி ஏதாவது முயற்சி நடைபெற்றால் அவை அருகில் உள்ள மற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் சமிக்ஞை அனுப்பிவிடும் என்று தெரிகிறது. இந்தப் புதிய இயந்திரங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பிஇஎல் அல்லது இசிஐஎல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று தயாரித்து வழங்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai