சுடச்சுட

  

  வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டியது மக்களின் பொறுப்பு: தலாய் லாமா

  By DIN  |   Published on : 03rd April 2017 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dalailama

  ""வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவது மக்களின் பொறுப்பு, கடவுளின் பொறுப்பு அல்ல'' என்று திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறினார்.
  அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, நான் என்னை "இந்தியாவின் புதல்வன்' என்று கூறி வருகிறேன். ""அப்படி ஏன் கூறுகிறீர்கள்?'' என்று சீன ஊடகங்கள் என்னிடம் கேள்வி கேட்டன.
  அதற்கு, ""எனது மூளை முழுவதும் நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிந்தனைகளே நிரம்பியுள்ளன; கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் சப்பாத்தி, பருப்புக் கடைசலையே சாப்பிட்டு வருகிறேன். எனவே, மனதளவிலும், உடலளவிலும் நான் இந்தியனாகவே இருக்கிறேன்'' என்று அவர்களுக்குப் பதிலளித்தேன்.
  நான் இந்திய அரசின் நீண்ட நாள் விருந்தாளி, தற்போது இந்தியக் கலாசாரத்தைப் பரப்பும் தூதுவனாக மாறிவிட்டேன்.
  மத நல்லிணக்கம்: மத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் நான் முழு உறுதியுடன் இருக்கிறேன். மத வன்முறைகளுக்கு தீய நோக்கம் கொண்ட சிலரே காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் பிரச்னைகளையும், கருத்து வேறுபாடுகளையும் குறைப்பதற்கு ஒரே வழி, நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை முதலில் உணர வேண்டும்.
  அமைதியான உலகம்: வன்முறை அல்லாத, அமைதியான உலகம் உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது வாழ்நாளில் மிகப்பெரிய மாற்றத்தைப் பார்ப்பேனா? இல்லையா? என எனக்குத் தெரியாது. ஆனாலும், நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
  கல்வி மூலமாக, எதிர்கால சந்ததிகள் நிலைமையை உணர்ந்து, அன்பும், இரக்கமும் கொண்ட சூழலை உருவாக்கும். மனிதநேயத்தின் எதிர்காலத்தை மனிதநேயமே தீர்மானிக்கும், கடவுள் அல்ல.
  முகமது நபியோ, புத்தரோ, மஹாவீரரோ இன்று மீண்டும் தோன்றினால், வன்முறையை உருவாக்கியது யார்? என்று கேள்வியெழுப்புவார்கள். நிச்சயமாக கடவுள் இல்லை. அதை மக்களாகிய நீங்கள்தான் உருவாக்கினீர்கள். எனவே, வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது உங்களது பொறுப்பாகும்.
  இந்திய ஜாதிய அமைப்பில், தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள், தாழ்வு மனப்பான்மையுடனே வாழும் மோசமான நிலையை நீங்கள்தான் மாற்ற வேண்டும்.
  இளமையின் ரகசியம்: எனக்கு 80 வயதுக்கும் மேலாகிறது. எனினும், நான் 70 வயதுக்காரர் போன்று இருப்பதாகக் கூறி, எனது இளமையின் ரகசியம் குறித்து பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களிடம், ""அது எனது ரகசியம்; அதை யாரிடமும் சொல்லமாட்டேன்'' என்று பதிலளித்து விடுவேன். (அரங்கில் இருந்தவர்கள் சிரிக்கிறார்கள்). ஆனால், மன அமைதியே அதற்கு முக்கியக் காரணமாகும் என்றார் தலாய் லாமா.
  கட்டாய மத மாற்றம் தவறு: இதனிடையே, மற்றொரு நிகழ்ச்சியில் தலாய் லாமா பேசுகையில், "" ஒருவர் மதம் மாறுவதால் குழப்பம் உருவாவதால், அவர் தனது பாரம்பரிய மதத்தைப் பின்பற்றுவதே நல்லது. எனினும், ஒருவர் தாமாக விரும்பி வேறு மதத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கட்டாயத்தின் காரணமாக அவர் மதம் மாறக்கூடாது. அது சமூகத்துக்கு நல்லதல்ல'' என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai