சுடச்சுட

  

  வன்முறையைக் கைவிட்டு வளர்ச்சிக்கு உதவுங்கள்: நரேந்திர மோடி

  By DIN  |   Published on : 03rd April 2017 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cave

  ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள், வன்முறை, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை கைவிட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

  ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள், வன்முறை, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை கைவிட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
  காஷ்மீர் பள்ளத்தாக்கையும், ஜம்முவையும் இணைக்கும் மிக நீளமான சுரங்கப் பாதையை திறந்து வைப்பதற்காக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமர் மோடி, உதம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
  காஷ்மீர் மாநில இளைஞர்கள், தங்களது பாரம்பரிய சூஃபி கலாசாரத்தைப் புறக்கணித்தால், அவர்கள் தங்களது நிகழ்காலத்தை இழப்பதுடன், எதிர்காலத்தையும் இருளில் மூழ்கடித்து விடுவார்கள்.
  பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் காஷ்மீர் மீது குறிவைத்துள்ளார்கள் என்றாலும் அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளாத நிலையில்தான் உள்ளனர்.
  வளர்ச்சியே இலக்கு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதே எனது முக்கிய குறிக்கோளாகும். இந்த மாநில வளர்ச்சிக்காக, தோளோடு தோள் கொடுத்து நிற்பேன் என்று உறுதியளிக்கிறேன். எனது நோக்கத்தைச் செயல்படுத்த மாநில மக்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்.
  "காஷ்மீரியம், ஜனநாயகம், மனிதநேயம்' ஆகிய வழிகளில் காஷ்மீர் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது நினைவுக்கு வருகிறது.
  அதே குறிக்கோளுடன் நல்லிணக்கம், சகோதரத்துவம், பற்றுறுதி ஆகியவற்றுடன் இந்த மாநில இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு மத்திய அரசு பாடுபடும்.
  செனானி-நஸ்ரி இடையே தற்போது திறக்கப்பட்டுள்ள 9 கி.மீ. தூர சுரங்கப்பாதை, மாநிலத்தின் தலைவிதியை மாற்றப்போகும் பாதையாகும். இந்தப் பாதை, பயண தூரத்தை குறைப்பது மட்டுமன்றி, வளர்ச்சியில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
  விவசாயிகளுக்கு நிம்மதி: மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்படுவதால், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இனி, அந்தப் பிரச்னை இருக்காது. அவர்கள் தங்களது விளைபொருள்களை, இந்த சுரங்கப் பாதை வழியாக சரியான நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியும். இதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்படாது.
  மேலும் இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் மாநிலத்துக்கு வருவதற்கு வழிவகுக்கும். நிலச்சரிவுகளால் நெடுஞ்சாலைகள் மூடப்படாலும் அவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
  கல் வீச்சு வேண்டாம்: இந்த மாநிலத்தில் தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள், முதலில் கற்களின் வலிமையை உணர வேண்டும். ஒருபுறம் மாநிலத்தில் தவறாக வழிநடத்தப்படும் பள்ளத்தாக்குப் பகுதி இளைஞர்கள் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றாலும் மற்றொருபுறம் அதே காஷ்மீர் மாநில இளைஞர்கள், தங்களது கடின உழைப்பால் இந்த சுரங்கப் பாதையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
  இந்த நேரத்தில், வளர்ச்சியா? பயங்கரவாதமா? இவற்றில் எதைத் தேர்வு செய்வது என்பதை காஷ்மீர் இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, காஷ்மீர் இளைஞர்கள் வன்முறைப் பாதையில் சென்றதால், மாநிலத்தில் ரத்தம் சிந்துதலும் இளைஞர்கள் உயிரிழப்பும்தான் ஏற்பட்டதே தவிர வேறு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
  ஆனால், அதே 40 ஆண்டுகளில் சுற்றுலா வளர்ச்சிக்கு இந்த மாநில மக்கள் முக்கியத்துவம் அளித்திருந்தால், உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்த மாநிலம் உருவாகியிருக்கும். எனவே, இந்த மாநில இளைஞர்கள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றார் மோடி.
  பிரதமருக்கு மெஹபூபா பாராட்டு: முன்னதாக, முதல்வர் மெஹபூபா முஃப்தி பேசியதாவது:
  காஷ்மீரில் கடந்த ஆண்டு நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. அப்போது மிகவும் ஆதரவாக இருந்தவர் பிரதமர் மோடி. ஜனநாயகத்தில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும்.
  நினைத்ததை முடிக்கும் துணிவு மிக்க தலைவரான மோடி, புதிய இந்தியாவைப் போன்று, புதிய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை உருவாக்குவதற்காக, இந்த மாநில இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார் அவர்.

  மிக நீளமான சுரங்கப் பாதை: திறந்து வைத்தார் மோடி

  செனானியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கையும், ஜம்முவையும் இணைக்கும் "செனானி-நஸ்ரி' சுரங்கப் பாதையைத் திறந்து வைத்தார். பின்னர், ஆளுநர் வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தியுடன் திறந்த வாகனத்தில் சுரங்கப் பாதையில் மோடி சிறிது தொலைவு பயணம் செய்தார்.
  இந்த சுரங்கப் பாதை, 9 கி.மீ. நீளம் கொண்டது. இதை அமைப்பதற்கு ரூ.2,500 கோடி செலவானது. இந்தப் பாதையால், பயணிகளுக்கு 2 மணி நேரம் மிச்சப்படுவதுடன், அவர்களின் பயணமும் பாதுகாப்பானதாக அமையும். இந்த சுரங்கப் பாதையின் மூலம், நாளொன்றுக்கு ரூ.27 லட்சம் மதிப்புடைய எரிபொருள் மிச்சப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  இந்த சுரங்கப் பாதையில் உலகத் தரத்திலான பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  இந்த சுரங்கப் பாதைக்கு இணையாக ஆபத்து காலத்தில் பயணிகள் தப்பிச் செல்வதற்கு வசதியாக மற்றொரு சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சுரங்கப் பாதையில் 150 மீட்டர் தூர இடைவெளியில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு, கண்காணிப்பு கருவிகள், காற்று வசதி, ஒளிபரப்பு வசதி, தீயணைப்பு வசதி, அவசர உதவி வசதி ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளன.


  ஜம்மு-காஷ்மீரில் செனானி-நஸ்ரி சுரங்கப் பாதையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த பிறகு,  அந்தப் பாதையில் ஜீப்பில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி. உடன், ஆளுநர் என்.என்.வோரா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai