சுடச்சுட

  

  அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கு: சாத்வி பிரக்ஞா உள்ளிட்ட 4 பேரை விடுவித்து என்ஐஏ அறிக்கை

  By DIN  |   Published on : 04th April 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து சாத்வி பிரக்ஞா சிங் தாக்குர், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் உள்ளிட்ட 4 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விடுவித்துள்ளது.
  இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வரும் ஜெய்ப்பூர் சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் இதற்கான அறிக்கையை அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ளது.
  இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞர் அஸ்வினி சர்மா கூறியதாவது: அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து சாத்வி பிரக்ஞா சிங், இந்திரேஷ் குமார், பிரின்ஸ், ராஜேந்திரா ஆகிய 4 பேரை விடுவிப்பதற்கான அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையை ஏற்று, வழக்கிலிருந்து அந்த 4 பேரையும் விடுவிப்பது குறித்து நீதிமன்றம் இந்த மாதம் 17-ஆம் தேதி முடிவெடுக்கும் என்றார் அவர்.
  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே, சுரேஷ் நாயர், ராம் சந்திர கல்சங்க்ரா ஆகிய மூவரும் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  என்ஐஏ-வால் தேடப்படும் முக்கியக் குற்றவாளிகள் பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம் பெற்றும், அவர்களைப் பற்றிய தகவல்கள் அளிப்பவர்களுக்கு சன்மானங்கள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், அந்த மூவரையும் என்ஐஏ-வால் பிடிக்க முடியாதது குறித்து நீதிபதி தினேஷ் குப்தா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த 3 பேரையும் பிடிப்பததற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி என்ஐஏ தலைவருக்கு அவர் கட்டளையிட்டார்.
  ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரிலுள்ள சூஃபி பிரிவினரின் வழிபாட்டுத் தலத்தில், கடந்த 2007-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் மூவர் உயிரிழந்தனர்; 17 பேர் காயமடைந்தனர்.
  இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கூறப்படும் 'அபிநவ் பாரத்' என்ற தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்ததாக சாத்வி பிரக்யா மீதும், இந்திரேஷ் குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதற்காக சுனில் ஜோஷி, தேவேந்திர குப்தா ஆகியோருக்கும், வெடிகுண்டைப் பொருத்தியதற்காக பவேஷ் பாய் பட்டேலுக்கும் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதித்தது நினைவுகூரத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai