சுடச்சுட

  

  இந்தியாவில் ஆப்பிரிக்க பிரஜைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் இனரீதியிலானவை: ஆப்பிரிக்கத் தூதர்கள் விமர்சனம்

  By DIN  |   Published on : 04th April 2017 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுதில்லி: இந்தியாவில் ஆப்பிரிக்க பிரஜைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் இனரீதியிலானவை என்று நம் நாட்டுக்கான ஆப்பிரிக்கத் தூதர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க போதுமான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுப்பதாகத் தெரிவியவில்லை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
  நைஜீரியா, கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பிரஜைகள் மீது இந்தியாவில் அண்மைக்காலமாக ஆங்காங்கே தாக்குதல்கள் நடைபெற்றன. தில்லியை அடுத்த கிரேட்டர் நொய்டா பகுதியில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த 4 மாணவர்கள் மீது சமீபத்தில் தாக்குதல் நடைபெற்றது.
  இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக தில்லியில் இந்தியாவுக்கான ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் (மார்ச்) 31-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  ஆப்பிரிக்கர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள் அனைத்தும் இனரீதியிலானவை; மற்ற நாட்டினர் மீதான வெறுப்பின் அடிப்படையில் நிகழ்ந்தவை என்பதை எங்கள் ஆலோசனைக் கூட்டம் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது.
  அண்மைக்காலமாக நடத்தப்பட்ட தாக்குதல்களை நாங்கள் கண்டிப்பதோடு, அச்சம்பவங்கள் தொடர்பாக கவலையும் தெரிவிக்கிறோம். அவை இந்திய அரசுத் தரப்பால் உரிமை முறையில் கண்டிக்கப்படவில்லை.
  இந்தச் சம்பவங்களை தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும் அரசியல் தலைவர்கள் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கு இந்திய அரசு போதுமான நடவடிக்கைகள் எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
  ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து மனித உரிமை கவுன்சிலும் மற்ற மனித உரிமை அமைப்புகளும் சுதந்திரமான முறையில் விசாரணை நடத்த வேண்டும்.
  அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ஆப்பிரிக்க யூனியன் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai