சுடச்சுட

  

  குற்ற வழக்கில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

  By DIN  |   Published on : 04th April 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது குறித்த மனுக்களை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
  இதுகுறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
  விடுமுறைக் காலத்தின்போது உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்படவிருக்கும் 5 நபர் அரசியல் சாசன நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டிய 3 விவகாரங்கள் குறித்து நாங்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டோம்.
  எனவே, குற்றவியல் வழக்கில் தொடர்புடையவர்களை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்வது, அல்லது அவர்களது எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. பதவிகளைப் பறிப்பது குறித்த முடிவுகளை, அந்த விடுமுறைக்கால அரசியல் சாசன அமர்வுகளைக் கொண்டு அவசரமாக நிர்ணயம் செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
  தற்போதுள்ள விதிகளின்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடைய நபர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழப்பார். அதேவேளையில், ஒருவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியும். இந்த நடைமுறையை எதிர்த்தும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளை மறுவரையறை செய்யக் கோரியும், பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
  அந்த மனுவையும், அதுபோன்ற பல்வேறு பொதுநல மனுக்களையும் கடந்த ஜனவரி மாதம் பரிசீலித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, ''இந்த விவகாரத்தில் அவசரகதியில் தீர்ப்பு வழங்க இயலாது. ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தாலே அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என உத்தரவிட்டால், அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே சிலர் மீது வழக்குகள் பதிய வாய்ப்புள்ளது.
  எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து முடிவெடுக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த அமர்வு உருவாக்கப்படும்'' என்று தெரிவித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai