சுடச்சுட

  

  பாதுகாப்புப் பெட்டக வசதி, காசோலைகளுக்கான கட்டணம் உயர்வு: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

  Published on : 04th April 2017 05:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை பராமரிக்காவிடில், அபராத கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களையும் உயர்த்தியுள்ளது.
  பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த மார்ச் மாதம் வரையிலும் காசோலை வசதியில்லாமல் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதாந்திர சராசரி இருப்புத் தொகையாக (எம்ஏபி) ரூ.500 வைத்திருந்தால் போதும். காசோலை வசதியுடன் கூடிய சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 வைத்திருந்தால் போதுமானதாகும்.
  இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், மேற்கண்ட தொகையை பெருநகரம், நகரம், சிறு நகரம், கிராமம் என்று தனித்தனியாக வகைப்படுத்தி, வேறு வேறு கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கி நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  பெருநகரத்தில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் தங்களது கணக்கில் மாதாந்திர சராசரி இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரத்தை வைத்திருக்க வேண்டும். இதேபோல், நகர்ப்புறத்தில் இருக்கும் வங்கியில் ரூ.3 ஆயிரமும், சிறிய நகர்ப்புறத்தில் இருக்கும் வங்கியில் ரூ.2 ஆயிரமும் வைத்திருத்தல் வேண்டும். கிராமப்புறத்தில் இருக்கும் வங்கியில் ரூ.1,000 வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட தொகையை வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளில் இருப்பு வைத்திருக்கவில்லையெனில், பெருநகரமாக இருக்கும்பட்சத்தில் ரூ.50 முதல் ரூ.100 வரையில் அபராத கட்டணம் வசூலிக்கப்படும். நகர்ப்புறம், கிராமப்புறங்களில் ரூ.20 முதல் ரூ.50 வரையில் அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.
  விதிவிலக்கு: இந்த அபராத கட்டணம், பாரத ஸ்டேட் வங்கியில் சுரபி கணக்கு வைத்திருப்போர், அடிப்படை சேமிப்பு கணக்குகள், பிரதமரின் ஜன்தன் யோஜனா கணக்கு வைத்திருப்போருக்கு பொருந்தாது.
  பாதுகாப்பு பெட்டகத்துக்கான வாடகைக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பெட்டகத்தை கட்டணமின்றி பயன்படுத்தும் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, பாதுகாப்பு பெட்டகத்தை ஆண்டுக்கு 12 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.
  காசோலைகளை பொருத்தவரையில், நடப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், நிதியாண்டில் 50 காசோலைகளை இலவசமாக பயன்படுத்தலாம். அதன்பிறகு ஒவ்வொரு காசோலைக்கும் ரூ.3 கட்டணம் வசூலிக்கப்படும். இதன்படி, 25 காசோலைகள் கொண்ட காசோலை புத்தகத்துக்கு ரூ.75 கட்டணம் மற்றும் சேவை வரி பெறப்படுகிறது. 50 காசோலைகள் கொண்ட புத்தகத்துக்கு சேவை வரி நீங்கலாக ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.
  இதேபோல், வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்குதல் உள்ளிட்ட சேவைகளை அளிப்பதற்கு ரூ.20 கட்டணமாக பெறப்படும் என்று அதில் பாரத ஸ்டேட் வங்கி குறிப்பிட்டுள்ளது.
  பாரத ஸ்டேட் வங்கியுடன் அண்மையில் 6 கிளை வங்கிகள் இணைந்தன. இந்த புதிய அறிவிப்பு, அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இதே அறிவிப்பை பிற வங்கிகளும் பின்பற்றலாம் எனவும் தெரிகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai