சுடச்சுட

  

  பிஎஸ் 3 வாகனங்கள் விவகாரம்: இடிஎம்சி-யின் மனுவை விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு

  Published on : 04th April 2017 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிஎஸ்-3 விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் கோரும் கிழக்கு தில்லி மாநகராட்சியின் (இடிஎம்சி) மனுவை விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

  முன்னதாக பிஎஸ்-3 மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுக்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றம் கடந்த 29-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், வாகன உற்பத்தியாளர்களின் நலன்களைவிட, பொதுமக்களின் நலனே மிகவும் முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

  உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவு கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், கிழக்கு தில்லி மாநகராட்சியால் புதிதாக வாங்கப்பட்ட 10 டீசல் வாகனங்களை பதிவு செய்யும் வகையில், அந்த உத்தரவில் மாற்றம் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

  அதில், "குப்பை அள்ளும் பணிக்காக வாங்கப்பட்டுள்ள அந்த டீசல் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வகை வாகனங்களை பொருத்தவரை, பிஎஸ்-3 விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களே சந்தைகளில் விற்பனைக்கு உள்ளன. பிஎஸ்-4 விதிகளின்படி தயாரிக்கப்பட்ட வாகனங்கள் சந்தைகளில் விற்பனைக்கு வரவில்லை. எனவே, கிழக்கு தில்லி மாநகராட்சியால் வாங்கப்பட்ட புதிய 10 டீசல் வாகனங்களை பதிவு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டது.

  இந்த மனு, பசுமைத் தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்கும் அதிகாரம், தங்களுக்கு இல்லை என்று தீர்ப்பாய அமர்வு தெரிவித்தது. இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொண்ட கிழக்கு தில்லி மாநகராட்சியின் வழக்குரைஞர், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகவிருப்பதாக தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai