Enable Javscript for better performance
ப. சிதம்பரம் மீதான புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந- Dinamani

சுடச்சுட

    

    ப. சிதம்பரம் மீதான புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகார வழக்கு

    Published on : 04th April 2017 12:59 PM  |   அ+அ அ-   |    |  

    supreme_court

    ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்ட அம்சங்கள் மீதான விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
    சுப்பிரமணியன் சுவாமி முறையீடு: இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது.
    அப்போது சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி, 'ஏர்செல் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்க அனுமதி அளித்த மத்திய நிதி மேம்பாட்டு வாரியத்தின் (எஃப்ஐபிபி) நடவடிக்கையில் சிதம்பரத்தின் பங்கு குறித்து நான் புகார் அளித்திருந்தேன். இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் விசாரித்து வருவதாக எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சிபிஐ கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.
    அப்போது, சிபிஐ தரப்பில் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி நீதிமன்றத்தில் இல்லை. இதையடுத்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கு தொடர்பான மத்திய அமலாக்கத் துறையின் விசாரணை நிலவர அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
    பின்னர் துஷார் மேத்தா, 'இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பு நிலைப்பாட்டை விளக்கவும் அதன் விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும் இரு வாரங்கள் அவகாசம் தேவை' என்றார்.
    நீதிபதிகள் உத்தரவு: இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'விசாரணை நிலவரத்தை இரு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்' என்று குறிப்பிட்டனர்.
    இந்த விசாரணை தொடர்பாக பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன்சுவாமி கூறியதாவது:
    மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்க எஃப்ஐபிபி ஒப்புதல் வழங்கியது. இந்த அனுமதியை அடிப்படையாக வைத்து ரூ.3,500 கோடி அளவுக்கு இந்தியாவில் மேக்சிஸ் நிறுவனம் அதன் சார்பு நிறுவனங்கள் மூலம் ஏர்செல் பங்குகளை வாங்கியுள்ளது. ஆனால், இதுபோன்ற விவகாரத்தில் ரூ.600 கோடி வரையிலான முதலீடுக்கு மட்டும்தான் மத்திய நிதியமைச்சர் தலைமையிலான எஃப்ஐபிபி அனுமதி அளிக்க முடியும். ரூ.600 கோடிக்கு மேலான முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைதான் ஒப்புதல் வழங்க முடியும். இந்த விவரத்தை ஏர்செல் - மேக்சிஸ் தொடர்பான குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் சிதம்பரத்தை காப்பாற்றும் நோக்குடன் சில அதிகாரிகள் செயல்பட்டதால் உண்மை வெளிவரவில்லை. எனவேதான் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளேன்' என்றார்.
    குற்றச்சாட்டுகள் ரத்து: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்கள் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
    இந்த ஒப்பந்த விவகாரத்தில் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைகளை அவர்களிடம் வழங்க அந்நாட்டு அரசு ஒத்துழைக்கவில்லை.
    இந்நிலையில் தகுந்த சாட்சியங்கள் இல்லை எனக் கூறி மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து, வழக்கில் இருந்தும் அவர்களை தில்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு விடுவித்தது.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp