சுடச்சுட

  
  virbhadraC

  கருப்புப் பண மோசடி வழக்கில், ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்குச் சொந்தமான ரூ.27 கோடி மதிப்பிலான பண்ணை வீட்டை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
  இதுதொடர்பாக, அமலாக்கத் துறை இயக்குநர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தெற்கு தில்லியின் மெஹ்ரெளலி பகுதியில் உள்ள வீரபத்ர சிங்கின் ''மேப்பிள் டெஸ்டினேஷன்ஸ் அன்ட் டிரீம் பில்ட்'' என்ற பெயர் கொண்ட பண்ணை வீடு முடக்கப்படுகிறது. அந்த வீட்டின் மதிப்பீட்டு விலை ரூ.6.61 கோடி. ஆனால், அதன் சந்தை மதிப்பு ரூ.27 கோடியாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  வீரபத்ர சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தது. அதனடிப்படையில், வீரபத்ர சிங் உள்ளிட்டோருக்கு எதிராக, கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை குற்றவியல் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தது. அதனடிப்படையில், அவருடைய சொத்துகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
  ஏப்ரல் 6-இல் விசாரணை: இதனிடையே, வீரபத்ர சிங் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வரும் வியாழக்கிழமை (ஏப். 6) விசாரணை நடத்தவுள்ளது.
  இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி வீரேந்திர குமார் கோயல் விடுப்பில் இருப்பதால், வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் உள்ளிட்ட 9 பேர் மீது, சிபிஐ கடந்த சில தினங்களுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai