சுடச்சுட

  

  அருணாசலுக்கு தலாய் லாமா வருகை: இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிட வேண்டாம்: ரிஜிஜு

  By DIN  |   Published on : 05th April 2017 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rijijiu

  அருணாசலப் பிரதேச மாநிலத்துக்கு திபெத் பெளத்த மதத் துறவி தலாய் லாமா செல்வதை எதிர்ப்பதன் மூலம், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று சீனாவை இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா செல்வது முழுக்க முழுக்க மதரீதியிலானது. அதற்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
  அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகும். அங்கு தலாய் லாமா செல்வதை எதிர்ப்பதன் மூலம், இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது.
  சீனாவின் ஒருமைப்பாட்டை இந்தியா மதிக்கிறது. அதே போல, இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் சீனா மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார் ரிஜிஜு.
  அருணாசலப் பிரதேசத்தின் தவாங், போம்டியால் ஆகிய பகுதிகளில் தலாய் லாமா பெளத்த மதச் சடங்குகளை செவ்வாய்க்கிழமை (ஏப். 4) நடத்துவதாக இருந்தது.
  இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திபெத்தின் ஒரு பகுதி என்று சீனாவால் கூறப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா சென்றால், இந்திய - சீன உறவில் மோசமான பாதிப்பு ஏற்படும் என்றும் சீனா எச்சரித்திருந்தது.
  இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, அமைச்சர் கிரண் ரிஜிஜு இவ்வாறு தெரிவித்தார்.
  மேலும், அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா செல்லும் விவகாரத்தை தேவையில்லாமல் எழுப்பி, செயற்கையான சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவை அறிவுறுத்தியுள்ளது.
  பயணத்தை தொடங்கினார் தலாய் லாமா : இதற்கிடையே, தலாய் லாமா திட்டமிட்டபடி தனது 9 நாள் அருணாசலப் பிரதேச பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.
  அருணாசலப் பிரதேச மாநிலம், மேற்கு கமாங் மாவட்டத்திலுள்ள பொம்டிலாவுக்கு சாலை மார்க்கமாக அவர் செவ்வாய்க்கிழமை சென்றார். அவருடன் முதல்வர் பெமா காண்டு உள்ளிட்டோரும் உடன் வந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai