சுடச்சுட

  

  இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை: அமெரிக்காவின் தலையீடு அவசியமில்லை: மத்திய அரசு

  By DIN  |   Published on : 05th April 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nikki

  இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகளில் அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையில் இந்தக் கருத்தை மத்திய அரசு கூறியுள்ளது.
  ஒபாமா தலைமையிலான முந்தைய அமெரிக்க அரசு, காஷ்மீர் விவகாரத்திலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளிலும் தலையிடாமல் இருந்து வந்தது. காஷ்மீர் பிரச்னை என்பது இரு நாடுகளுக்கிடையேயானது என்றும் இதில் அமெரிக்கா குறுக்கிடாது என்றும் ஒபாமா தெரிவித்திருந்தார்.
  இந்நிலையில், அங்கு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு புதிய அதிபராகப் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்திலும் அவர் தலையிடத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
  நியூயார்க்கில் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே , செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:
  இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் போக்கைக் களைய வேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கு அக்கறை உள்ளது. இந்த விவகாரத்தில் தானாகவே சுமுகத் தீர்வு ஏற்படும் என்று காத்திருப்பது தவறு.
  அவ்விரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் பதற்றத்தைத் தணிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அவற்றை முன்னெடுப்பதில் அமெரிக்காவும் பங்குவகிக்க விரும்புகிறது. அதற்கான முயற்சிகளில் அமெரிக்க அரசு ஈடுபடும்.
  இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையைத் தீர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகள் பங்களிப்பை நல்கக் கூடும். அவ்வளவு ஏன், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட இதில் நேரடியாக இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார் அவர்.
  இந்தியா நிராகரிப்பு: இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு இந்தியா மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுமுகத் தீர்வு காண்பதற்கு உதவுவதாக அந்நாடு கூறியுள்ளதையும் இந்தியா புறந்தள்ளியுள்ளது.
  இதுகுறித்து வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் தில்லியில் ஊடகங்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத அமைதியான சூழல் உருவானால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. அதைத் தவிர்த்து வேறு எந்த நடவடிக்கைகளும் சுமுகத் தீர்வை ஏற்படுத்தாது. அதேவேளையில், பாகிஸ்தானில் இருந்து மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை வேரறுக்க சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai