சுடச்சுட

  

  உ.பி.: ரூ.36,000 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் யோகி முடிவு

  By DIN  |   Published on : 05th April 2017 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yogi

  உத்தரப் பிரதேசத்தில் ரூ.36,359 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் 2.22 கோடி விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
  உத்தரப் பிரேதச சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின்போது 'ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என்ற வாக்குறுதியை பாஜக அளித்தது. இத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. மனோஜ் சின்ஹா, கேசவ பிரசாத் மௌர்யா ஆகிய இரு துணை முதல்வர்களும் அமைச்சர்களும் பதவியேற்றனர்.
  இந்நிலையில், ஆதித்யநாத் தலைமையில் மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் லக்னௌவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த முடிவு எடுக்கப்படும் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப, ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை ரத்து செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. அரசு மதிப்பீட்டின்படி இந்தக் கடன் தள்ளுபடியால் 2.22 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் இம்முடிவால் அரசுக் கருவூலத்துக்கு ரூ.36,359 கோடி செலவாகும் என்றும் தெரிய வந்துள்ளது. இந்தத் தள்ளுபடியில், 2.15 கோடி சிறு குறு விவசாயிகள் பெற்றிருந்த ரூ.30,729 கோடி கடன்,
  7 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.5,630 கோடி கடன் ஆகியவை அடங்கும். தள்ளுபடி செய்யப்படும் ரூ.36,359 கோடிக்கு ஈடாக அதே மதிப்பிலான நிதியைத் திரட்டுவதற்கு 'கிசான் ராஹத்' பத்திரங்களை வெளியிட அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  அரசிடம் உள்ள தகவல்களின்படி உத்தரப் பிரதேசத்தில் உள்ள 2.30 கோடி விவசாயிகளில் 2.15 கோடி பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் இயற்கைச் சீற்றங்களால் தங்கள் பயிர்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து ரூ.62,000 கோடி மதிப்பிலான கடன்களைப் பெற்றனர். இந்தச் சூழ்நிலையில், ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற உத்தரப்பிரதேச அரசின் முடிவானது அவர்களுக்கு பெரிய ஆறுதலை அளிக்கும் என்று கருதப்படுகிறது.
  உத்தரப் பிரதேச விவசாயக் கடன் தள்ளுபடிக்கு நிதி உதவி செய்தால் மற்ற மாநில அரசுகளும் அதேபோன்ற கோரிக்கையை எழுப்பும் என்பதால், இத்திட்டத்துக்கு நிதியுதவி செய்ய முடியாது என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
  மகாராஷ்டிரத்தில் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், இதுவரை விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவிக்கவில்லை. போதிய நிதி இல்லை என்று அம்மாநில அரசு தெரிவிக்கிறது.
  மறுபுறம், நிதி நிலைமை மோசமாக இருந்தபோதிலும் பஞ்சாப் மாநில அரசு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
  தேசிய அளவில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான கடன் தள்ளுபடி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கடந்த 2008-இல் அறிவிக்கப்பட்டதாகும். 5 கோடி விவசாயிகளுக்குப் பயனளிக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டத்தால் மத்திய அரசுக் கருவூலத்துக்கு ரூ.65,000 கோடி செலவானது.

  பள்ளிகளில் யோகா கட்டாயம்


  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில கல்வித்துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு யோகாசனக் கல்வித் திட்டத்தைக் கட்டாயமாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதவிர, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கட்டாய தற்காப்புப் பயிற்சி அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

  ராமாயண அருங்காட்சியகம்
  ராமபிரான் அவதரித்த இடமாக ஹிந்துக்களால் கருதப்படும் அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இது குறித்து மகேஷ் சர்மா பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ராமாயண அருங்காட்சியகம் அமைக்கும் திட்டப் பணிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.154 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் முந்தைய அரசின் (சமாஜவாதி அரசு) ஆட்சிக்காலத்தில் திட்டப் பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது' என்றார்.

  காப்பி அடிப்பதைத் தடுக்க நடவடிக்கை
  கல்வித்துறை அதிகாரிகளுடன் யோகி ஆதித்யநாத் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது, தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிக்கும் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாணவர்கள் பெருமளவில் காப்பி அடிக்கும் தேர்வு மையங்களைக் கருப்புப் பட்டியலில் வைக்குமாறும், வழக்குப்பதிவு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், தனியார் பயிற்சி நிலையங்களை நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

  சட்டவிரோத இறைச்சிக்கூடங்களுக்கு அனுமதி இல்லை


  உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கும் இறைச்சிக்கூடங்களை அனுமதிப்பதில்லை என்றும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவை வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றுவது என்றும் அந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai