சுடச்சுட

  

  ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் விதிகளை மீறிச் செயல்படவில்லை

  By DIN  |   Published on : 05th April 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pchidambaram

  மத்திய நிதியமைச்சராக தாம் பதவி வகித்த காலத்தில் ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் எந்தவித விதிகளையும் மீறிச் செயல்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
  இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
  ஏர்செல் - மேக்சிஸ் பரிவர்த்தனைக்கு வழங்கப்பட்ட அனுமதி மீதான விசாரணை பற்றி வெளியாகி வரும் செய்திகளையடுத்து, மத்திய நிதியமைச்சராக நான் பதவி வகித்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைவுகூர்கிறேன். மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் (எஃப்ஐபிபி) அரசுத் துறைகளைச் சேர்ந்த ஐந்து செயலர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் உள்ளனர். எஃப்ஐபிபி அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அவற்றை ஏற்பதா, நிராகரிப்பதா என்பது குறித்து அந்த வாரியம் தீர்மானிக்கும். சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தின் முதலீடு மதிப்பின் அடிப்படையில் அதை மத்தியப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்கோ மத்திய நிதியமைச்சருக்கோ எஃப்ஐபிபி அனுப்பி வைக்கும்.
  ஏர்செல் - மேக்சிஸ் வழக்கைப் பொருத்த வரையிலும், அந்நிய முதலீட்டின் மதிப்பை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதியைக் கோரி மத்திய நிதியமைச்சரின் பார்வைக்கு எஃப்ஐபிபி அனுப்பி வைத்தது. மத்திய நிதியமைச்சர் என்ற முறையில், வழக்கமான அலுவல் நடைமுறைப்படி அந்த விண்ணப்பத்துக்கு நான் அனுமதி அளித்தேன்.
  இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரியிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் தொடர்புடைய கோப்பு சரியான முறையிலேயே மத்திய நிதியமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கமான அலுவல் நடைமுறையின்படியே அதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது என்பதை விசாரணையின் போது துறைச் செயலர், கூடுதல் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் சிபிஐயிடம் தெரிவித்தனர். எனவே, இந்த விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என அறிக்கையில் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai