சுடச்சுட

  

  கருப்புப் பண மோசடி வழக்கு: உண்மைகளை மறைக்கும் அமலாக்கத்துறை

  By DIN  |   Published on : 05th April 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  veerabathra_singh

  தனக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை உண்மைகளை மறைப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் கற்பனையான மதிப்பீட்டை வெளியிட்டிருப்பதாகவும் ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் குற்றம்சாட்டினார்.
  கருப்புப் பண மோசடி வழக்கில், ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு சொந்தமான ரூ.27 கோடி மதிப்பிலான பண்ணை வீட்டை அமலாக்கத் துறை அண்மையில் முடக்கியது. இதுதொடர்பாக, அமலாக்கத் துறை இயக்குநர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் 'கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தெற்கு தில்லியின் மெஹ்ராலி பகுதியில் உள்ள வீரபத்ர சிங்கின் 'மேப்பிள் டெஸ்டினேஷன்ஸ் அன்ட் டிரீம் பில்ட்' நிறுவனத்துக்கு சொந்தமான பண்ணை வீடு முடக்கப்படுகிறது. அதன் மதிப்பீட்டு விலை ரூ.6.61 கோடி. ஆனால், அதன் சந்தை மதிப்பு ரூ.27 கோடியாகும்' என்று தெரிவிக்கப்பட்டது.
  இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மீது குற்றம்சாட்டி வீரபத்ர சிங் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எனக்கும், என் மகன் உள்ளிட்டோருக்கும் எதிரான கருப்புப் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை உண்மைகளை மறைக்கிறது. மேலும், எங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பை அந்த அமைப்பு கூடுதலாகக் காட்டுகிறது. ஒருவரது அரசியல் எதிரிகள் உண்மைகளைத் திரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால், ஒரு பொறுப்புள்ள அரசு அமைப்பானது (அமலாக்கத்துறை) அவ்வாறு நடந்து கொள்வதும், எனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதும் மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும்.
  ஹிமாசலப் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எனது தலைமையில் அமைந்துள்ள அரசை சீர்குலைக்க மத்திய அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. இதுவரை எனக்கு எதிராக எந்தக் குற்றமும் கண்டறியப்படாதபோதிலும் எனக்கு எதிரான போலியான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது.
  வருமான வரித்துறையின் சண்டீகர் பிரிவின் உத்தரவுப்படி எனது சொத்துகள் தொடர்பாக அடிப்படை ஆதாரமற்ற, கற்பனையான ஆய்வு அறிக்கைகளை ஃபரீதாபாத் வருமான வரித்துறை துணை ஆணையர் உருவாக்கினார்.
  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் பண்ணை வீட்டை எனது மகன் விக்ரமாதித்யா நிர்வகிக்கும் மேப்பிள் நிறுவனமானது ரூ.1.20 கோடிக்குதான் வாங்கியது. ஆனால் அதன் மதிப்பு ரூ.27 கோடி என்று தவறான மதிப்பீட்டைப் பயன்படுத்தி எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் வீரபத்ர சிங் தெரிவித்துள்ளார்.
  வழக்கின் பின்னணி: வீரபத்ர சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ கடந்த 2015-ஆம் ஆண்டில் இவ்வழக்கைப் பதிவு செய்திருந்தது. அதனடிப்படையில், வீரபத்ர சிங் உள்ளிட்டோருக்கு எதிராக, கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை குற்றவியல் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தது. அதனடிப்படையில், அவருடைய சொத்துகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai