சுடச்சுட

  

  பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: காஷ்மீர் முதல்வர்

  By DIN  |   Published on : 05th April 2017 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mehbooba

  பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
  அப்போதுதான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
  காஷ்மீரின் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிடிபி கட்சி சார்பில் மெஹபூபாவின் சகோதரர் முஃப்தி தஸாதுக் ஹுசைன் அங்கு போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மெஹபூபா முஃப்தி, பாகிஸ்தான் தொடர்பாக பேசியதாவது: வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும், கொள்கையையும் பாகிஸ்தான் கொண்டிருந்தது. தற்போதைய சூழலிலும் அதே கொள்கையை அந்நாடு கடைப்பிடிக்க வேண்டும்.
  பிரதமர் மோடி, கடந்த 2015-ஆம் ஆண்டில் திடீரென பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைச் சந்தித்தது இரு நாட்டு நல்லுறவுக்கான புதிய அத்தியாயமாகக் கருதப்பட்டது.
  ஆனால், துரதிருஷ்டவசமாக அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கவராதிகள் பதான்கோட் மற்றும் உரி பகுதிகளில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதன் விளைவாக இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
  பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தியாவுடன் அந்நாடு பேச்சுவார்த்தையை நடத்த இயலும். நம்மால் நண்பர்களை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், அண்டை வீட்டாரை மாற்ற முடியாது. அவர்களை அனுசரித்து, ஒருவருக்கொருவர் ஆதரவாகத்தான் வாழ வேண்டும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அதுபோலத்தான் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான உறவும் உள்ளது என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai